மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகி உள்ளது.

மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இதுவரை களமிறங்காமல் இருக்கின்றன. எனினும், இந்த நிலை விரைவில் மாற இருக்கிறது. இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வரும் முதல் எலெக்ட்ரிக் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் என தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி இந்த எலெக்ட்ரிக் கார் தோற்றம் இரு நிறுவனங்களுக்கும் முற்றிலும் வேறுபடும் என்றும் கூறப்படுகிறது.

இதில் மாருதி சுசுகியின் எலெக்ட்ரிக் கார் YY8 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. இது முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும். தோற்றத்தில் தற்போது மாருதி சுசுகி விற்பனை செய்து வரும் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தைகளுக்கென உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கு உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம்.

மாருதி சுசுகியின் YY8 மாடல் 4.2 மீட்டல் நீளமான பாடி, 2700mm வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் டூ-வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. பேஸ் மாடலான டூ-வீல் டிரைவ் வேரியண்டில் 148 ஹெச்.பி. திறன் வழங்கும் பேட்டரி மற்றும் 48கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். 

ஆல் வீல் டிரைவ் மாடலில் 170 ஹெச்.பி. திறன் வழங்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 59 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும். டொயோட்டா மாடலிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட இருக்கின்றன. எனினும், வெளிப்புறம் தோற்றத்தில் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. 

மாருதி சுசுகி YY8 மாடலுக்கான பேட்டரியை TDSG வினியோகம் செய்ய இருக்கிறது. TDSG என்பது சுசுகி மோட்டார் கார்ப், டென்சோ கார்ப் மற்றும் டொஷிபா கார்ப் நிறுவனங்கள் இணைந்து உருவான கூட்டணியின் பெயர் ஆகும். TDSG பேட்டரி பேக் சீனாவின் BYD இல் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் செல்களால் உருவாக்கப்பட இருக்கின்றன. 

மாருசி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் கார் மாடலை 2025 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இரு நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விலை ரூ. 13 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.