lic ipo : ரஷ்யா –உக்ரைன் போர் காரணமாக எல்ஐசி ஐபிஓ அளவை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா –உக்ரைன் போர் காரணமாக எல்ஐசி ஐபிஓ அளவை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
40 % குறைப்பு
எல்ஐசி ஐபிஓ மூலம் 5சதவீதப் பங்குகளை விற்பனை செய்து ரூ.55ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால்,அந்த அளவை தற்போது ரூ.30ஆயிரம் கோடியாகக் குறைத்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் முடிவு
அதுமட்டுமல்லாமல் எல்ஐசி ஐபிஓ வெளியீடு குறித்து இந்த வார இறுதிக்குள் மத்திய அரசு இறுதிமுடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை மே மாதத்துக்குள் ஐபிஓ வெளியீடு இல்லாவிட்டால் முதல்காலாண்டு முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளி்ல் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.65ஆயிரம் கோடி வரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன.

மே 12வரை கெடு
எல்ஐசி ஐபிஓ வெளியிட சந்தை ஒழுங்கமைப்புக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி மத்திய அரசுக்கு மே 12ம்தேதிவரைதான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்குள் பங்குகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக செபியிடம் மத்திய அரசு பங்குவெளியீடு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆதலால், மே 12ம் தேதிக்குள் எல்ஐசி ஐபிஓ இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகின. இதன்படி ஒருவாரத்துக்குள் மத்திய அரசு ஐபிஓ வெளியீடு குறித்து புதிய முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே மத்திய வட்டாரங்கள் கூறுகையில் மே 2ம் தேதி எல்ஐசி ஐபிஓ இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடந்து வருவதால், இந்த நேரத்தில் எல்ஐசி ஐபிஓ நடத்தினால், அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வந்து முதலீடு செய்யமாட்டார்கள் என மத்திய அரசு கருதுகிறது.

அதேநேரம் பங்கு விற்பனையையும் ஒத்திவைக்கக் கூடாது, உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், ஐபிஓ அளவை மட்டும் மத்திய அரசு குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ரூ.65ஆயிரம் கோடி வரை நிதி திரட்டுவதற்குப் பதிலாக ரூ.30ஆயிரம் கோடிவரை என நிதிதிரட்டும் அளவை 40 சதவீதம் சுருக்கிக்கொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
