கவாசகி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் Z650 RS ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
கவசாகி நிறுவனம் தனது Z650 RS 50-வது ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கு கொடுக்கும் கூடுதல் விலைக்கு கவாசகி Z650 RS பிரத்யேக நிறத்தில் கிடைக்கிறது. இது கவாசகி Z1 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

கவாசகி Z650 RS ஸ்பெஷல் எடிஷன் மாடல் 80-களில் மிகவும் பிரபலமான இருந்த ஃபயர்கிராக்கர் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர, இந்த மாடலில் குரோம் கிராப் ரெயில், கோல்டன் நிற ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நிறம் தவிர இந்த மாடல் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஸ்டாண்டர்டு எடிஷன் போன்றே காட்சியளிக்கிறது.
இந்த மாடலிலும் 649சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், முன்புறம் டூயல் செமி-ஃபுளோட்டிங் 300mm டிஸ்க், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
