Jeep EV: ஜீப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
நெதர்லாந்தில் நடைபெற்ற Dare Forward 2030 நிகழ்வில் ஜீப் நிறுவனம் தனது எதிர்கால திட்டங்கள் பற்றிய முன்னோட்டத்தை வெளியிட்டது. ஜீப் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாக வாகனங்களை எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் பார்க்கப்படுகிறது. அதன்படி முழுமையான எலெக்ட்ரிக் திறன் கொண்ட ஜீப் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் பற்றி ஜீப் எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடலின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜீப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது ஜீப் காம்பஸ் போன்ற மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. விரைவான் வெளியீட்டை வைத்து பார்க்கும் போது இது தற்போது விற்பனை செய்யப்படும் ஜீப் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜீப் நிறுவனம் பல்வேறு பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை 4xe பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் கிராண்ட் செரோக்கி, ராங்ளர், காம்பஸ் மற்றும் ரெனகேட் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜீப் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் படி புதிய மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள், ஹெட்லேம்ப்களின் கீழ் ஃபாக் லேம்ப்கள் உள்ளன.
எலெக்ட்ரிக் மாடல்களுக்கு கிரில் தேவைப்படாது என்ற போதிலும், இந்த மாடலில் 7 ஸ்லாட் கிரில் உள்ளது. இது எலெக்ட்ரிக் மாடல் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கிரில் மீது e எனும் வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. டெயில் லேம்ப்களில் X வடிவ இன்சர்ட்கள் உள்ளன.
ஜீப் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மட்டுமின்றி ஸ்டெலாண்டிஸ் நிறுவனம் மேலும் சில எலெக்ட்ரிக் கார்களை காட்சிப்படுத்தியது. 2030 ஆண்டிற்குள் ஸ்டெலாண்டிஸ் நிறுவனம் 100 எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜீப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனத்துடன் ராங்கர் EV மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
