இஸ்ரேல்-ஈரான் பதற்றம் - அழகுசாதனத் தொழில் தொடர்பு: இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் இப்போது உங்கள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் விலையையும் பாதிக்கலாம்.
இஸ்ரேல்-ஈரான் போர் - அழகுசாதனப் பொருட்கள் விலை உயரும்
தமிழ் திரைப்படங்களில் வரும் டயலாக் போல சண்டையில கிழியாத சட்டையா? என்பது போல, சர்வதேச அளவில் எங்கு பிரச்சினை நடந்தாலும் அது பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கும் அதுபோல, எந்த நாடுகளில் சண்டை நடக்கிறதோ அந்த நாடுகளிடம் வர்த்தக தொடர்பில் இருக்கும் மற்ற நாடுகளும் மறைமுகமாக பாதிக்கும்.
இஸ்ரேல்-ஈரானில் போர் தொடர்கிறது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் 150 ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்தப் போரின் தாக்கம் இந்த இரு நாடுகளைத் தவிர இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ளது. இந்தப் போர் நீடித்தால், கச்சா எண்ணெயின் விலை உயரும், பெட்ரோல்-டீசல், தங்கம்-வெள்ளி ஆகியவையும் விலை உயரும். மேலும் உங்களுக்குப் பிடித்தமான பிராண்டட் வாசனை திரவியங்கள், சருமப் பராமரிப்பு கிரீம்களும் விலை உயரக்கூடும். சர்வதேச அரசியல் மற்றும் உலக பொருளாதார தாக்கம் காரணமாக அழகுசாதனப் பொருட்களின் செலவு அதிகரிக்கக்கூடும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்திற்கும் நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்து கொள்வோம்.
இஸ்ரேல்-ஈரான் போரால் வாசனை திரவியம் ஏன் விலை உயரும்?
பெரும்பாலானோர் வாசனை திரவியம் என்பது வெறும் மணம் சார்ந்த பொருள் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அதன் அடிப்படை பெட்ரோலியம். ஆம், பெரும்பாலான வாசனை திரவியங்கள் மற்றும் டியோடரண்டுகளில் பயன்படுத்தப்படும் கரைப்பான்கள், ஆல்கஹால் அடிப்படை மற்றும் செயற்கை சேர்மங்கள் பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை (Crude Oil Prices) உயரும். கச்சா எண்ணெய் விலை உயரும்போது, வாசனை திரவியம் தயாரிக்கப் பயன்படும் அடிப்படை மூலப்பொருட்களும் விலை உயரும்.
அழகுசாதன கிரீம்கள் மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களின் விலையும் உயருமா?
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, 'மாய்ஸ்சரைசிங்' மற்றும் 'மென்மையான சருமம்' என்று படித்து நீங்கள் மகிழ்ச்சியடையும் கிரீம்களின் பின்னணியிலும் கச்சா எண்ணெயின் வேதியியல் உள்ளது. பெட்ரோலிய ஜெல்லி, பாராபென்கள், மினரல் ஆயில், இவை அனைத்தும் பெட்ரோலிய வழித்தோன்றல்கள். இவை விலை உயர்ந்தால், சரும கிரீம்கள், பாடி லோஷன்கள், சன்ஸ்கிரீன் மற்றும் ஃபேஸ் மாஸ்க் ஆகியவற்றின் விலையும் படிப்படியாக அதிகரித்து நமது மாதாந்திர பட்ஜெட்டில் எதிரொலிக்கும்.
மத்திய கிழக்கில் பதற்றத்தால் அழகுசாதனத் தொழில் ஏன் பதற்றத்தில் உள்ளது?
போர் பதற்றம் காரணமாக இறக்குமதி தடைபடும் போது உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும்.லோரியல், யூனிலீவர், எஸ்டீ லாடர் போன்ற சர்வதேச அழகுசாதன பிராண்டுகள் ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை குறித்து கவலை கொண்டுள்ளன. மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வழங்கல் குறைந்தால் அல்லது விநியோகச் சங்கிலி தடைப்பட்டால், அழகுசாதனத் தொழிலுக்கு மூலப்பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்து, லாபம் குறையும்.
இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்குமா?
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவிலும் இதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும். ஏனெனில் நம் நாடு உலகின் முன்னணி அழகுசாதன நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள நிறுவனங்களும் சர்வதேச கூறுகளைச் சார்ந்துள்ளன. சரும வெண்மையாக்கும் கிரீம், மேக்கப் கிட் அல்லது ஹேர் ஜெல் என எதுவாக இருந்தாலும், மூலப்பொருட்களின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. ஜிஎஸ்டி அல்லது வரி உயராது, ஆனால் அடிப்படை உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும். இது தயாரிப்பின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
விலை எவ்வளவு அதிகரிக்கும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, இப்போது யாரும் பயப்படத் தேவையில்லை. ஆனால் போர் (இஸ்ரேல் ஈரான் போர்) நீடித்தால், வரும் வாரங்களில் அழகுசாதனப் பொருட்களின் விலை 10-50 ரூபாய் வரை உயரக்கூடும். மாதசம்பளத்தை மட்டுமே கொண்டு பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகமானோர் வாழும் இந்தியாவில் 50 ரூபாய் என்பது அதிகமே என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும், உள்நாட்டு பிராண்டுகள், அவற்றின் உற்பத்தி மற்றும் மூலப்பொருட்கள் உள்நாட்டிலேயே இருப்பதால், சற்று குறைவான தாக்கத்தை எதிர்கொள்ளும்.
