இந்தியாவின் 40% சொத்துக்களை வைத்திருக்கும் 1% பணக்காரார்கள்; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ஆக்ஸ்பாம்!!
இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்துள்ளனர். அதே சமயம் பாதி அளவிலான மக்கள் தொகையினர் வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று திங்களன்று வெளியான புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இந்திய பொருளாதார சமத்துவமின்மை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பத்து பணக்காரர்களுக்கு 5 சதவீத வரி விதித்து, அந்த நிதியைக் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு வரவைத்து, கல்வியை கொடுக்க முடியும் என்ற கருத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் ஆக்ஸ்பாம், ''கவுதம் அதானி என்ற ஒரு கோடீஸ்வரர் மீது 2017-2021 ஆம் ஆண்டுக்கு பெறப்படாத ஆதாயங்களுக்கு ஒரு முறை வரி விதித்தால் ரூ. 1.79 லட்சம் கோடியை திரட்ட முடியும். இந்த நிதியானது ஒரு வருடத்திற்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்த போதுமானது.
இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களுக்கு ஒரு முறை 2 சதவீதம் வரி விதித்தால், நாட்டிற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் ஊட்டச்சத்துக்காக, ரூ.40,423 கோடி திரட்டலாம்.
நாட்டில் உள்ள 10 பணக்கார பில்லியனர்களுக்கு (ரூ. 1.37 லட்சம் கோடி) ஒரு முறை 5 சதவீத வரி விதித்தால், 2022-23 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ. 3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதியை விட 1.5 மடங்கு திரட்டலாம்.
இத்துடன் பணியிடங்களில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் பெண்களுக்கு வெறும் 63 பைசா மட்டுமே வருமானமாக இருக்கிறது. இங்கும் பெண்களுக்கு சமத்துவம் இல்லை. இந்த வித்தியாசம் கிராமங்களில் பணியாற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் இடையே அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு நகரங்களில் இருக்கும் பெண்களுடன் ஒப்பிடுகையில் வெறும் 55 சதவிகித வருமானம் தான் கிடைக்கிறது. மேலும் நகர்ப்புற ஆண்களுடன் ஒப்பிடுகையில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற ஆண்கள் வெறும் பாதி வருமானம் மட்டுமே சம்பாதித்து உள்ளனர்.
"சிறந்த 100 இந்திய கோடீஸ்வரர்களுக்கு 2.5 சதவிகிதம் வரி விதிப்பது அல்லது முதல் 10 இந்திய பில்லியனர்களுக்கு 5 சதவிகிதம் வரி விதித்தால், கல்வி பெற முடியாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர தேவையான முழு நிதியும் கிடைக்கும்.
நவம்பர் 2022 ஆம் ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் அல்லது ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி உயர்ந்துள்ளது. மறுபுறம், 2021-22 ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரியான (ஜிஎஸ்டி) ரூ.14.83 லட்சம் கோடியானது சுமார் 64 சதவீதம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. 3 சதவீதம் மக்களிடம் இருந்து 10 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டில் 166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் 100 பெரிய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 54.12 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது இந்தியாவின் 18 மாதங்களுக்கான முழு மத்திய பட்ஜெட்டுக்கு ஈடானது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகனாமிக் டைம்ஸ்க்கு ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் அளித்து இருக்கும் பேட்டியில், ''நாட்டின் விளிம்பு நிலையில் இருக்கும் தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏழைகள் விகிதாச்சாரத்தில் அதிக வரி செலுத்துகின்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக செலவு செய்கிறார்கள். இதன் மூலம் அதிக வரி செலுத்த நேரிடுகிறது. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க நேரம் வந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.