பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது. இதனால் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பாகிஸ்தான் பொருட்களின் இறக்குமதி முடங்கியுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதையும் இந்திய அரசு முற்றிலுமாகத் தடை செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாக வரும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) மே 2 அன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்தியாவிற்குள் பொருட்களை அனுப்பப் அனுமதித்த வர்த்தக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
என்ன மாறிவிட்டது?
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (FTP) 2023 ஐத் திருத்தி, "பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடை" என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளது. அதில், “பாகிஸ்தானில் உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி மறுஉத்தரவு வரும் வரை தடைசெய்யப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதயாரிப்பு செய்யப்பட்ட பொருட்களாக இருந்தாலும், பாகிஸ்தான் மூலம் இடைநிலை நாடுகள் வழியாக அனுப்பப்பட்டதாக இருந்தால், அவை இந்தியாவிற்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது.
இந்த நடவடிக்கை ஏன் இப்போது?
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டது. அடுத்தபடியாக இந்தியா எடுத்துள்ள பெரிய ராணுவம் சாராத பதிலடி நடவடிக்கை இதுவாகும். அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் இந்தியச் சந்தையில் நுழைவதற்கான எல்லா வழியையும் துண்டிக்கிறது.
வர்த்தகத்தில் நீண்ட சரிவு
2019 முதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி வர்த்தக உறவு மோசமடைந்து வருகிறது. அந்த ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் பொருட்களுக்கு 200% சுங்க வரியை இந்தியா விதித்தது. பாகிஸ்தானின் MFN அந்தஸ்தை ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தபோது, அதற்கான பதில் நடவடிக்கையாக இருதரப்பு வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதன் விளைவாக, 2019ஆம் நிதியாண்டில் 2.5 பில்லியன் டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2024 நிதியாண்டில் சுமார் 1.2 பில்லியன் டாலராக சரிந்தது. 2018-19 இல் பாகிஸ்தானில் இருந்து நேரடி இறக்குமதி மதிப்பு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலராக இருந்தது. இது ஏப்ரல் 2024 மற்றும் ஜனவரி 2025 க்கு இடையில் 0.42 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இப்போது, சிறிய அளவுக்கு வந்துகொண்டிருந்த பேரீச்சம்பழங்கள், அத்திப்பழங்கள், விதைகள் மற்றும் மூலிகைகள் இறக்குமதியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மறைமுக வர்த்தகம் பற்றி என்ன?
நேரடி இறக்குமதி குறைவாக இருந்தாலும், உண்மையான பிரச்சினை மறைமுக வர்த்தகத்தில் உள்ளது. தொழில்துறை நிபுணர்கள் மற்றும் வர்த்தக சிந்தனைக் குழுவான GTRI இன் கூற்றுப்படி, சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் முதலில் பாகிஸ்தானில் இருந்து பிற நாடுகள் வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு:
ஐக்கிய அரபு அமீரகம்: பாகிஸ்தானிய பழங்கள், தோல் மற்றும் ஜவுளி பொருட்கள் பெரும்பாலும் துபாயில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன.
இலங்கை: பேரீச்சம்பழங்கள், உப்பு மற்றும் தோல் SAFTA வர்த்தகச் சலுகைகளின் கீழ் பதப்படுத்தப்பட்டு இலங்கை வழியாக விற்கப்பட்டன.
சிங்கப்பூர்: பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட சிறப்பு ரசாயனங்கள் மற்றும் சாயங்கள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய துறைமுகங்களுக்குள் நுழைகின்றன.
இந்தோனேஷியா: சிமெண்ட், சோடா சாம்பல் மற்றும் நூல் ஆகியவை ஜகார்த்தா வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.
புதிய கொள்கை, இறக்குமதி செய்யப்படும் பொருள் உண்மையாக எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது எனச் சரிபார்ப்பதை உறுதிசெய்கிறது. சுங்கத்துறை இந்தச் சோதனையை மேற்கொள்ளும். இதன் மூலம் பாகிஸ்தான் மறைமுக வர்த்தக வழிகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.
இது இந்தியாவைப் பாதிக்குமா?
இதனால் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது. பாகிஸ்தானுடனான குறைந்தபட்ச வர்த்தகத்திற்கு இந்தியா ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பெறப்படும் பிங்க் ஹிமாலயன் உப்பு போன்றவை கிடைக்காமல் போவதால் பெரிய பாதிப்பு இருக்காது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதை நம்பியிருந்த சில எல்லைப்புற நகரங்கள் அல்லது தொழில்களுக்கு மட்டும்தான் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியப் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படாது என்கிறார்கள்.
உண்மையான பாதிப்பு பாகிஸ்தானுக்கு:
ஏற்கனவே பணவீக்கம், அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் IMF அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு, இந்த 500 மில்லியன் டாலர் வர்த்தக இழப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். இந்தியாவிற்கு அனுப்புவதற்கான பொருட்களை மறுதயாரிப்பு செய்யும் வர்த்தகர்ககளின் நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் வாய்ப்புகளை இழப்பார்கள்.


