SIP முதலீட்டில் ரூ.10 கோடி சம்பாதிப்பது எப்படி? இத பண்ணுங்க போதும்..!
SIP முதலீட்டில் 10 சதவீத வருடாந்திர அதிகரிப்புடன் ரூ.10 கோடி சேமிப்பு இலக்கை எவ்வாறு அடைவது என்பது பற்றி இங்கு காணலாம்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிப் (SIP) முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிப் (SIP) என்பது Systematic Investment Plan. மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரே சமயத்தில் மொத்தமாக பெரிய தொகையை முதலீடு செய்யாமல், மாதம் தோறும் அல்லது வாரம் தோறும் நிலையாக முதலீடு செய்யும் இந்த முறைக்கு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், முறையான முதலீட்டுத் திட்ட (SIP) முதலீட்டில் ஆண்டுக்கு 10 சதவீத அதிகரிப்புடன் ரூ.1 கோடி, ரூ.5 கோடி, ரூ.10 கோடி இலக்கை எவ்வாறு அடைவது என்பது பற்றி இங்கு காணலாம்.
Systematic Investment Plan என்பதின் அடிப்படை சாராம்சமே உங்களுக்கு விருப்பமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நிலையான தொகையை முதலீடு செய்வதுதான். இந்த ஒழுங்குமுறை சேமிப்பு மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை அதிகரிப்பதனால், உங்கள் நிதி இலக்குகளை உங்களால்அடைய முடியும்.
உதாரணத்துக்கு நீங்கள் மாதந்தோறும் ரூ.30,000 முதலீடு செய்ய ஆரம்பித்து, ஒவ்வொரு வருடமும் இந்த முதலீட்டை 10 சதவீதம் அதிகரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது அடுத்த வருடம் 10 சதவீதம் அதிகமாக சேர்த்து முதலீடு செய்ய வேண்டும். அப்படியானால், FundsIndia's Wealth Conversations நவம்பர் 2023 அறிக்கையின்படி, நீங்கள் 10 ஆண்டுகளில் ரூ.1 கோடியும், 19 ஆண்டுகளுக்குள் ரூ.5 கோடியும், 23 ஆண்டுகள் 5 மாதங்களில் ரூ.10 கோடியும் உங்களுக்கு கிடைக்கும்.
இதேபோல், நீங்கள் ரூ.50,000 முதலீடு செய்ய ஆரம்பித்து, ஒவ்வொரு வருடமும் இந்த முதலீட்டை 10 சதவீதம் அதிகரிக்கிறீர்கள் என்றால், இந்த கால அளவு கணிசமாகக் குறையும். 7 ஆண்டுகள் 8 மாதங்களில் ரூ.1 கோடியையும், 15 ஆண்டுகள் 10 மாதங்களில் ரூ.5 கோடியையும், 20 ஆண்டுகளில் ரூ.10 கோடி என்ற இலக்கை எட்ட முடியும். அதுவே, உங்களிடம் அதிக தொகை இருந்து, இதே பாணியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்ய முடிந்தால், 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி உங்களுக்கு கிடைக்கும். 12 ஆண்டுகளில் ரூ.5 கோடியும், 15 ஆண்டுகளில் ரூ.10 கோடியையும் உங்களால் குவிக்க முடியும்.
இந்த கணிப்புகள் 12 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR) கணக்கிடப்படுகின்றன. பங்கு சந்தை ஈக்விட்டிகளில் இந்த வருவாய் விகிதம் காணப்பட்டாலும், சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக சில ஆண்டுகளில் உங்களது வருமானம் குறைவாகலாம் அல்லது இழப்புகள் கூட நேரிடலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
மேற்கண்ட இலக்கை அடைய, எந்த லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிலும் சிப் (SIP) முதலீடுகளை நீங்கள் தொடங்கலாம். நீங்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளராக இருந்தால், லார்ஜ் கேப், மீடியம் கேப், ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் ஒரு ஒழுக்கமான அணுகுமுறை உள்ளது. இதனை பற்றிய முழுமையான புரிதல் அவசியம். நீண்ட காலத்திற்கு உங்கள் முதலீடுகளை வைத்திருக்க பொறுமை தேவை. உங்கள் SIP முதலீடுகளில் நீங்கல் செய்யும் வருடாந்திர அதிகரிப்பு, உங்கள் நிதி இலக்குகளை நோக்கி உங்கள் பயணத்தை விரைவுபடுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் பயணத்தில், குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகாமல், நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் நிலையாக இருப்பதுதான் முக்கியம்.