ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய புதிதாக துணை பிராண்டு ஒன்றை துவங்கி இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தை மேற்கொள்ள "விடா" பெயரில் புதிதாக துணை பிராண்டு ஒன்றை துவங்கி இருக்கிறது. விடா பிராண்டின் கீழ் உருவாகி வரும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஜூலை 1, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஹீரோ எலெக்ட்ரிக் பெயரில் வேறு நிறுவனம் இயங்கி வருவதால், ஹீரோ மோட்டோகார்ப் இந்த பெயரை தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்த முடியாது. இதன் காரணமாகவே விடா எனும் புதிய பிராண்டை ஹீரோ மோட்டோகார்ப் துவங்கி உள்ளது. முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் மார்ச் மாதத்திலேயே அறிமுகமாகும் என கூறப்பட்டது.

எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி புதிய எலெக்ட்ரிக் வாகன வெளியீடு மேலும் சில மாதங்கள் தாமதமாகி இருக்கிறது. இத்துடன் இந்த மாடலின் வினியோகம் அறிமுக நிகழ்வுக்கு பின் சில மாதங்கள் கழித்தே துவங்கும் என தெரிகிறது.

"விடா என்றால், வாழ்க்கை என அர்த்தம் ஆகும். பூமியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் அர்த்தமுள்ள வழிகளில் பயணிக்க செய்ய வேண்டும். நம் குழ்தைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்காக நாங்கள் உருவாக்கும் வாகனங்களை பரிதிபலிக்கும் சிறப்பான பெயர் இது என நாங்கள் நம்புகிறோம்." 

"இது முற்றிலும் சிறப்பான ஒன்றின் துவக்கம். இன்று தொடங்கி சரியாக 17-வது வாரத்தில் உலகத்தை சிறப்பான இடமாக மாற்றும் விடா பிளாட்பார்ம், பொருட்கள் மற்றும் சேவைகளை வெளியிடுவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்தார். 

விடா பிராண்டின் கீழ் வளர்ந்து வரும் மொபிலிட்டிக்கு ஏற்ற வாகனங்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. விடா பிராண்டு வாகனங்களின் உற்பத்தி ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் உற்பத்தி ஆலையில் நடைபெற இருக்கிறது. விடா பிராண்டு வாகனங்கள் வினியோகம் இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது.