Russia Ukraine Crisis: வால்வோ மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்கள் வரிசையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் ரஷ்யாவில் தனது வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.
பிரீமியம் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி டேவிட்சன் ரஷ்யாவுக்கான வாகனங்கள் வினியோகத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. உக்ரைனுடனான போர் சூழல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் ரஷ்ய வியாபாரத்தை நிறுத்துவதில் வால்வோ, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் வரிசையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் தற்போது இணைந்து இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் மட்டுமின்றி ஃபோர்டு நிறுவனமும் ரஷ்ய வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய தகவலை ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லி டுவிட்டரில் தெரிவித்தார். மேலும் உக்ரைனுக்கு நிவாரண நிதியாக ஃபோர்டு ஃபண்ட் சார்பில் ஒரு லட்சம் டாலர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு மனித நேய உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன.

ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன், வால்வோ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டையம்லர் டிரக் உள்ளிட்ட நிறுவனங்களும் ரஷ்ய வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்தன. இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு வாகனங்கள் ஏற்றுமதியை நிறுத்தி உள்ளன. முன்னதாக உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் விதமாக அந்நாட்டுடன் போரிட்டு வரும் ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுக்களுக்கு இடையில் நடைபெறும் போர் காரணமாக ரஷ்யாவில் வியாபாரத்தை நிறுத்துவதாக வால்வோ கார்ஸ் முதலில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் மற்றும் இதர நிறுவனங்களும் இணைந்தன. வால்வோ நிறுவனம் ஸ்வீடன், சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
இதே நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் டையம்லர் டிரக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களும் ரஷ்ய வியாபாரத்தை நிறுத்தி இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும் வரை இந்த நிறுவனங்களின் ரஷ்ய வியாபாரம் நிறுத்தப்படுகிறது.
