இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி அமைப்பில் பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. இதன் மூலம் வாகன வகைப்பாட்டில் உள்ள சர்ச்சைகள் தீர்க்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும்.

தலைகீழாக மாறப்போகும் ஜிஎஸ்எஸ்டி

நாட்டின் ஜிஎஸ்டி அமைப்பில் முழுமையான மாற்றம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்களில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரி விகிதங்கள் மறுசீரமைக்கப்படும். வாகனங்களின் வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எஞ்சின் திறன், வாகன அளவு தொடர்பான வகைப்பாட்டில் உள்ள சர்ச்சைகள் புதிய முறையில் தீர்க்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஆட்டோமொபைல் துறை அதிகபட்ச ஜிஎஸ்டி விகிதத்தில் உள்ளது. இந்த புதிய சீரமைப்பின் மூலம், பொதுமக்களுக்குப் பயன் செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

இப்போ ஜிஎஸ்டி எவ்ளோ தெரியுமா?! 

தற்போது, இந்தியாவில் வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இது அதிகபட்ச ஜிஎஸ்டி விகிதமாகும். மேலும், வாகனத்தின் வகையைப் பொறுத்து 1% முதல் 22% வரை கூடுதல் வரியும் வசூலிக்கப்படுகிறது. இது வாகனம் வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எஞ்சின் திறன் மற்றும் அளவைப் பொறுத்து, சிறிய பெட்ரோல் கார்களுக்கு 29% முதல் SUVகளுக்கு 50% வரை வரி விதிக்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கும் சுமையை ஏற்படுத்துகிறது.

மாற்றம் வந்தால் முன்னேற்றம்

நாட்டின் ஜிஎஸ்டி அமைப்பை 5%, 18% மற்றும் சில பொருட்களுக்கு 40% என இரு அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வாகனங்கள் ஒரு அடுக்கில் சேர்க்கப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சின் திறன் மற்றும் நீளத்தை அடிப்படையாகக் கொண்ட வாகன வகைப்பாட்டில் உள்ள சர்ச்சைகள் இதன் மூலம் முடிவுக்கு வரும். தற்போதைய 28% உடன் ஒப்பிடும்போது, 18% ஜிஎஸ்டி விகிதம் கார்களின் தேவை மற்றும் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், புதிய சீரமைப்பால் வாகனங்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

மலிவு விலையில் கார்கள் கிடைக்கும்

இந்திய பயணிகள் வாகன சந்தையின் முக்கிய பங்களிப்பாக இருக்கும் சிறிய கார்களுக்கு இந்த ஜிஎஸ்டி சீரமைப்பால் ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்பதே மத்திய அரசின் ஜிஎஸ்டி சீரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

12% மற்றும் 28% விகிதங்களை நீக்குவது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டம், ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் ஜிஎஸ்டி விகிதம் குறித்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் (GOM) விவாதிக்கப்படும். அதன் பிறகு, மத்திய மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாதம் கூடி இறுதி ஜிஎஸ்டி விகித அமைப்பை அங்கீகரிக்கும்.