வீடு வாங்க போறீங்களா.? அதிரடியாக குறையுது ஜி.எஸ்.டி ..!   

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க வரிச்சலுகை அளிக்க முடிவு செய்யப்படும் என்றும், அதே சமயத்தில் அடுக்குமாடி குடியிருப்பு களுக்கான வரியும் குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு குறு தொழில்களுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

 இந்நிலையில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும். அதன்படி ரூபாய் 20 லட்சம் ஆண்டு வருமானமாக உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு ரூபாய் 75 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கு 5 சதவீதம் வரி நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான 
சான்று அளிக்காவிட்டாலும் இந்த வரி விதிக்கப்படும். தற்போது கட்டிமுடிக்கப்படாமல் வீடுகள் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் உள்ளீடு வரி வரவு மூலம் 12 சதவீத வரியில் பெருமளவு தொகையை திரும்ப பெறுகின்றன. ஆனால் இந்த வரிச்சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளிப்பதில்லை. இதனால் வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்து அதை அனைத்து வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் செலுத்துமாறு புதிய விதியை கொண்டுவர உள்ளது. இதில் 80 சதவீத அளவுக்கு ஜிஎஸ்டியை திரும்பப்பெறும் கட்டுமான நிறுவனங்கள் 5 சதவீத வரியை செலுத்த வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தி காணப்பட்டு வந்தாலும், தற்போது ஜிஎஸ்டி உள்ளிட்ட சில திட்டங்களில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மீண்டும் கொண்டுவருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை சற்று மந்தமாக காணப்பட்டது. அதற்கு காரணம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை பாதிப்படைந்தது. இந்நிலையில் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி கட்டுமான துறைக்கு நிர்ணயம் செய்யும்போது, மீண்டும் ரியல் எஸ்டேட் துறை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது