டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரிப்பு!
டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
பண்டிகை கால நுகர்வு காரணமாக கடந்த ஆண்டை விட டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 10.3 சதவீதம்ன் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது. 2024ஆம் நிதியாண்டில் இதுவரையிலான சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.14.97 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.13.4 லட்சம் கோடியாக இருந்தது எனவும், இது 12% வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பரில், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டது. இதற்கிடையில், அக்டோபர் மாத பரிவர்த்தனைகளுக்கான நவம்பர் மாத வசூல் ரூ.1.67 கோடியாக உள்ளது.
கடந்த மாதத்தை விட வசூல் சற்று குறைவு. ஆனால், ரூ.1.6 லட்சம் கோடிக்கு மேல் நிலையான குறியானது பல்வேறு உலகளாவிய தலையீடுகள் இருந்தபோதிலும் நிதி நம்பிக்கையை அளிப்பதாக KPMG இன் மறைமுக வரியின் தேசிய தலைவரான அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார். “பண்டிககால மகிழ்ச்சி மற்றும் நிதியாண்டு 17-18 மற்றும் 18-19 நிலுவைத் தொகைகளைத் தொடர்ந்து செலுத்துவது இந்த தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்பை அளித்திருக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் கொலை?
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,64,882 கோடி. மத்திய ஜிஎஸ்டி ரூ.30,443 கோடி. மாநில ஜிஎஸ்டி: ரூ.37,935 கோடியாக உள்ளது. பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.41,534 கோடி உட்பட ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.84,255 கோடியாக உள்ளது. அதேபோல், பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.1,079 கோடி உட்பட செஸ் வரி ரூ.12,249 கோடியாக உள்ளது.
மாநில வாரியாக பார்த்தால், மாநில ஜிஎஸ்டி செட்டில்மென்டிற்கு பிறகு, ஒடிசா மாநிலம் 29 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ரூ.18,093 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.14,046 கோடியை அம்மாநிலம் பதிவு செய்திருந்தது.
மாநில வாரியான வசூலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ரூ.95,981 கோடியில் இருந்து ரூ.1.09 லட்சம் கோடியாக அதிகரித்து 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநில ஜிஎஸ்டி செட்டில்மென்டிற்கு பிறகு, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முறையே, ரூ.55,656 கோடி, ரூ.54,881 கோடியாக உள்ளது.