சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் கொலை?
இந்தியாவால் மிகவும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசார் கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவால் மிகவும் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசார் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி மசூத் அசார். சட்டவிரோதமாக போலி அடையாள ஆவணம் மூலம் இந்தியாவில் நுழைந்த அவர் 1994ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, 1999 ஆம் ஆண்டு நேபாளில் இருந்து டெல்லிக்கு வந்த IC-814 விமானம், ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அதில் பிணைக் கைதிகளாக சிக்கிக் கொண்ட பயணிகளுக்கு ஈடாக மசூத் அசார் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் இந்தியாவால் விடுவிக்கப்பட்டனர்.
மசூத் அசார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு 2000ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார். ஜெய்ஷ்-இ-முகமது இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. 2001 நாடாளுமன்றத் தாக்குதல், பதான்கோட் விமானப்படை தளம், ஜம்மு மற்றும் யூரியில் உள்ள ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் மற்றும் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் உட்பட, இந்தியா மீதான பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் மசூத் அசார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!
இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக கடந்த ஆண்டு மே மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இந்த நிலையில், மசூத் அசார் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பவல்பூர் மசூதியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் மசூத் அசார் காரில் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கார் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் காரில் பயணித்த மசூத் அசார் உள்பட அனைவரும் உடல் சிதறி பலியானதாக தெரிகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், சமூக வலைதளமாக எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் 20க்கும் மேற்பட்ட உயர்மட்ட பயங்கரவாதிகள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியான அட்னான் அகமது படுகொலை செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவின் டேங்க் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியும் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவருமான ஹபிபுல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் தேடப்பட்டு தப்பியோடிய பிரபல தாதா தாவூத் இப்ராஹிம், மர்ம நபர்களால் விஷம் வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகம் தகவல்கள் வெளியாகின.