Invest in India: இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்! ஜெர்மனி தொழிலதிபர்கள் கருத்து
ஜெர்மனி அந்நாட்டைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் என்று கூறுகின்றனர்.
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் இரண்டு நாட்கள் பயணமாக சனிக்கிழமை இந்தியா வந்திருக்கிறார். டெல்லி வந்த அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின், மாலை நாடு திரும்புகிறார்.
இதனிடையே ஸ்கோல்ஸ் வருகையை ஒட்டி அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
"அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடையப் போகிறது என்பதையும், இங்கு முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பதையும் நாங்கள் அறிவோம். உலகிற்கு மேக் இன் இந்தியா போன்ற ஒரு திட்டம் தேவை" என்று ஹபங் லாய்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோல்ஃப் ஹாபென் யான்சன் கூறியுள்ளார்.
"மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பசுமை ஆற்றல், உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா முதலீடு செய்ய மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். அத்துடன் டிஜிட்டல் தொடர்பும் வேகமும் அதிகமாக உள்ளது" என்கிறார் சீமென்ஸ் ஏஜி நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோலண்ட் புஷ்.
"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான தொழில்நுட்ப தளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. உற்பத்தி, பொறியியல் துறைகளுக்கு இந்தியா ஒரு நல்ல தளமாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது" என்கிறார் எஸ்.எப்.சி. எனர்ஜி ((SFC Energy) நிறுவனத்தின் சி.இ.ஓ. டாக்டர் பீட்டர் போடேசர்.
டி.ஹெச்.எல். (DHL) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டோபியாஸ் மேயர், "இந்தியாவில் உண்மையான திறனை நாங்கள் காண்கிறோம். டி.ஹெச்.எல். 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வேலை செய்து வருகிறது. இந்தியா எங்களுக்கு ஒரு நல்ல சந்தையாக உள்ளது. இங்குள்ள சந்தையில் வேகமான வளர்ச்சியைக் காண்கிறோம்" என்று கூறி இருக்கிறார்.
"இந்தியா நிலைத்தன்மை உள்ள வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளது. கார்பன் இல்லாத விநியோகச் சங்கிலியை உருவாக்கும் சூழற்சி முறை பொருளாதாரத்திற்கு உரிய தொழில்நுட்ப பயன்பாட்டை விரும்புகிறது. சுத்தமான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துச் செல்கிறது" எஸ்.ஏ.பி. (SAP) நிறுவனத்தின் சி.இ.ஓ. கிறிஸ்டியன் க்ளீன் கூறுகிறார்.