கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சென்னை உட்பட நாடு முழுவதும் 4வது முறையா இன்று பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம், கச்சா எண்ணெய் சப்ளை குறைவு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையை கட்டத்துக்கட்டமாக உயர்த்தி வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 14ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.100.84 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.107-ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.92.39 இலிருந்து ரூ.99.55 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.99.51-ஐ நெருங்கியுள்ள நிலையில், கொல்கத்தாவில் ரூ.110-ஐ கடந்துள்ளது. இந்த திடீர் உயர்வு பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் தினசரி செலவுகள் மட்டுமின்றி, காய்கறி, மளிகை, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பலர் தனியார் வாகனங்களை குறைத்து, மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தற்போதைய சர்வதேச சூழ்நிலை நீடித்தால் இன்னும் ஒரு கட்ட எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரிதும் சார்ந்திருப்பதால், உலக சந்தை மாற்றங்கள் நேரடியாக உள்நாட்டு விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.