ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக ரூ.3250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு,க.ஸ்டாலின் ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் தமிழகத்தில் உற்பத்தியை தொடங்குவோம் என்று ஃபோர்டு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு

அதன்படி ஃபோர்டு நிறுவனம், ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதாவது தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் பதிவு

பின்பு இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது.

தமிழக தொழில்துறை வலிமை

இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது! தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.