சென்னையில் இயங்கி வரும் ஃபோர்டு ஆலை பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் மூடப்படுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் இடையே இழப்பீடு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக சென்னையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக பணியாளர் யூனியன் தலைவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆலையில் பணியாற்றி வரும் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஃபோர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறி ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இந்த போராட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆலை பணியாளர்கள் ஏற்கனவே செய்த பணிக்கும், மீதமுள்ள பணி காலத்திற்கும் வழங்க வேண்டிய தொகையை நிர்வாகம் அளிக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், ஆலையில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோருக்கு 25 ஆண்டுகள் வரை பணிக்காலம் மீதம் இருப்பதால், இழப்பீடு தொகை மிகவும் அதிகமாக இருக்கும் என ஃபோர்டு நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் சுமார் 2700 நிரந்தர பணியாளர்களும், 600 பேர் அலுவலர் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். இந்திய வியாபாரத்தை நிறுத்துவதால் ஃபோர்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5300 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பாதிக்கப்படுவர்.
