கச்சா எண்ணெய் கடல் நீரில் கலப்பு :

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி விசாகப்பட்டினம் நோக்கி எரிவாயு நிரப்பிய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. ‘எம்.பி.டபிள்யூ மாப்பிள்’ என்ற பெயர் கொண்ட இந்த கப்பலும், மும்பையில் இருந்து துறைமுகம் நோக்கி வந்த ‘‘எம்.டி.டான் காஞ்சீபுரம்’’ என்ற எண்ணை கப்பலும் மோதிக்கொண்டன. எண்ணூர் துறைமுகத்தின் நுழைவுக் கால்வாய் அருகில் நடந்த இந்த விபத்தில் எண்ணை கப்பல் சேதம் அடைந்தது.

எண்ணை கப்பலில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை அதிக அளவில் இருந்தது. கப்பல் சேதம் அடைந்ததால் அதில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது.

எங்கெல்லாம் பரவியது ?

இதனால் எர்ணாவூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான கடல் பகுதிகள் முழுவதும் எண்ணை படலமாக மாறியது. கடல் நீரின் மேல்மட்டத்தில் இருந்து சுமார் ஒரு அடி உயரத்துக்கு தடிமனாக எண்ணை மிதக்கிறது. கப்பல் விபத்து ஏற்பட்ட கடந்த சனிக்கிழமை அன்று எண்ணூர் கடலோர பகுதிகளில் மட்டுமே எண்ணை கசிவால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை அகற்றுவதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மெரீனா :

இதன் காரணமாக கடலில் பரவிய எண்ணை, மெரினா கடற்கரை பகுதியையும் தாண்டி திருவான்மியூர் கடல்பகுதி வரையிலும் பரவி விட்டது. எண்ணை கசிவு ஏற்பட்டு இன்றுடன் 4 நாட்கள் ஆகிறது. எண்ணூரில் தொடங்கி திருவான்மியூர் வரையில் கடல் பகுதிகள் எண்ணையாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நீலக்கடல் கருப்பு கடல் நீர் :

இதனால் நீலக்கடல் கருப்பு கலராக மாறிப் போயுள்ளது. எண்ணை பரவியுள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இது போன்று பாதிப்புக்குள்ளான இடங்களில், கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. எண்ணூர் பகுதியில் பெரிய ஆமைகளும், மீன்களும் செத்து கரை ஒதுங்கி வருகின்றன.

எண்ணெய் பிரித்தெடுக்கும் பணி தீவிரம் :

கடல் பகுதியில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து நேற்று மாலை முதல் எண்ணையை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பரவி கிடக்கும் எண்ணையை அகற்ற கடலோர காவல்படையினர் சக்கர் என்ற கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் கடலில் படிந்துள்ள எண்ணை மிகவும் தடிமனாக இருப்பதால் வெளியேற்ற முடியவில்லை. இதனால் வாளிகள் மூலமாக எண்ணையை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.இதுபோன்று எண்ணையை அகற்றுவது சவாலானதாகவே இருப்பதாக கடலோர காவல்படையினர் கூறினர்.

மீனவர்கள் கடும் பாதிப்பு :

இதற்கிடையே கடலோர பகுதிகளில் பரவி இருக்கும் எண்ணை படலத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணூர் பகுதியில் இருந்து பைபர் படகுகள் மூலமாக தினமும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதே போல காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்வார்கள்.

கடந்த 4 நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 15 நாட்கள் வரை தங்கி இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்கும் விசைப் படகு மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

விசைப்படகு :

இருப்பினும் விசைப்படகுகளில் பிடித்து கரைக்கு கொண்டு வரும் மீன்களை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விசைப்படகுகளை கரையோரம் கொண்டு வரமுடியாது. மீன்களுடன் வரும் விசைப்படகுகளை கரையில் இருந்து சற்று தூரத் தில் நிறுத்தி விட்டு பைபர் படகுகளில் சென்று மீன்களை கரைக்கு எடுத்து வருவார்கள். இதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணை படலங்கள் கடற்கரை மணல் பரப்பிலும் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் வலைகளை வைக்க முடியாமலும் மீனவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மீன்களை வாங்க மக்கள் அச்சம் :

கடலோர பகுதிகள் எண்ணைக் காடாக மாறி இருப்பதால், மீன்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். கடலில் எண்ணை கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்குமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் மார்க்கெட்டுகளில் வழக்க மான விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதிக்கும் மேல் மீன் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.