இந்தியாவில் முகவரிகளைத் துல்லியமாகக் கண்டறிய டிஜிபின் எனும் புதிய டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முகவரிகளைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் டிஜிபின் (DigiPIN) எனும் புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில் அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்ட இந்த முறைக்கு ஐஐடி ஹைதராபாத் தொழில்நுட்ப உதவி அளித்துள்ளது. இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையமும் இதில் பங்களித்துள்ளது. 10 எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட டிஜிபின் குறியீடு, நான்கு சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள எந்தவொரு வீடு அல்லது கட்டிடத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. இதில் உள்ள தகவல்கள் முழுக்க முழுக்க புவியியல் சார்ந்தவை. தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இடம்பெறாததால் தனியுரிமைக்குப் பாதிப்பு ஏற்படாது.
டிஜிபின் என்ற டிஜிட்டல் வசதி
தற்போதுள்ள பின்கோடுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். ஆனால், டிஜிபின் மூலம் மிகவும் துல்லியமான சேவைகளை வழங்க முடியும். குறிப்பாக, அவசரகால சேவைகள், காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் வீட்டின் டிஜிபின் குறியீட்டை அறிய, அஞ்சல் துறையின் பிரத்யேக வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். இணைப்பு: https://dac.indiapost.gov.in/mydigipin/home வலைத்தளத்தைப் பயன்படுத்த, உங்கள் உலாவியில் இருப்பிட அணுகலை இயக்க வேண்டும்.
டிஜிபின் குறியீடு
பின்னர் தோன்றும் அனுமதி கோரும் பாப்-அப்பில் 'அனுமதி' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். டிஜிபின் தனியுரிமைக் கொள்கைக்கு 'நான் ஒப்புக்கொள்கிறேன்' என்பதன் மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு, உங்கள் திரையில் 10 எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட டிஜிபின் குறியீடு தோன்றும். இது உங்கள் வீட்டிற்கான தனித்துவமான முகவரி குறியீடு. வரைபடம் மூலம் பிற இடங்களின் டிஜிபின் குறியீடுகளையும் பார்க்கலாம். இவ்வாறு, டிஜிபின் மூலம் இந்தியாவின் முகவரி முறையை டிஜிட்டல் மயமாக்கும் திசையில் ஒரு முக்கியமான படி எடுக்கப்பட்டுள்ளது.
