Cyrus Mistry : டாடாவின் வாரிசு முதல் டாடா சன்ஸை நீதிமன்றத்துக்கு இழுத்தவர் வரை.! யார் இந்த சைரஸ் மிஸ்திரி ?
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.
இன்று சுமார் மாலை 3:15 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் சென்றனர். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யார் இந்த சைரஸ் மிஸ்திரி ? :
2012 இல் ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரபலமடைந்தார் சைரஸ் மிஸ்திரி. அவர் குழுவின் ஆறாவது தலைவராக இருந்தார். மேலும் டாடா என்ற குடும்பப்பெயர் அல்லாத இரண்டாவது நபர் என்ற பெயர் பெற்றார். நவ்ரோஜி சக்லத்வாலாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..இனி எல்லாமே எடப்பாடி வசம்.. சசிகலா சொன்ன அந்த வார்த்தை - எஸ்கேப் ஆன ஆர்.பி உதயகுமார்!
சர்ச்சையில் டாடா குழுமம் :
அக்டோபர் 2016ல், டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், தானாக முன்வந்து ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய பின்னர், தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரியை நீக்க வாக்களித்தது. முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இடைக்காலத் தலைவராக பிறகு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு நடராஜன் சந்திரசேகரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், டிசம்பர் 2019ல், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) சந்திரசேகரனின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அறிவித்தது. மீண்டும் உச்ச நீதிமன்றம் 10 ஜனவரி 2020 அன்று NCLAT இன் உத்தரவை நிறுத்தி வைத்தது. NCLAT இல் உள்ள முரண்பாடுகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் குறுக்கு மேல்முறையீட்டை மிஸ்திரி தாக்கல் செய்தார். ஆனால், அவரது பதவி நீக்கத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
சைரஸ் மிஸ்திரி சொத்து மதிப்பு :
சைரஸ் மிஸ்திரி தனது நிறுவனமான சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4% பங்குகளை வைத்திருந்தார். 2018ல், அவரது நிகர மதிப்பு தோராயமாக $10 பில்லியன் ஆகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, சைரஸ் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியின் சொத்து 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் இறக்கும் போது US$29 பில்லியன் சொத்து இருந்தது. அப்போது உலகின் 143 பணக்காரராகவும் இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!
குடும்ப வாழ்க்கை :
சைரஸ் மிஸ்திரி மும்பை நகரத்தில் பார்சி குடும்பத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், கட்டுமான அதிபருமான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார். அவரது பெற்றோர் இருவரும் ஜோராஸ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இருப்பினும் சைரஸ் மிஸ்திரியின் தாயார் அயர்லாந்தில் பிறந்தார். மிஸ்திரிக்கு ஷபூர் மிஸ்திரி என்ற மூத்த சகோதரர் உள்ளார்.
அவரும் அயர்லாந்து குடிமகன் ஆவார். மிஸ்திரிக்கு லைலா மற்றும் ஆலூ என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிஸ்திரி 1991 இல் குடும்பக் கட்டுமான நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி & கோ.லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்தார். ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியின் நிர்வாக இயக்குநராகவும், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராகவும் மிஸ்திரி இருந்து வந்தார்.
கல்வி தகுதி :
மிஸ்திரி தெற்கு மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் & ஜான் கானான் பள்ளியில் படித்தார். பிறகு அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். 1990ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பயின்றார். 1996ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் சர்வதேச நிர்வாக முதுநிலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !