கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டி மூலம் இதுவரை வருமானம் ஈட்டியவர்களின் பட்டியலை சேகரித்து  அவர்களின் வருமானத்தை வருமானவரிக்குள் கொண்டுவரும் முயறச்சியில் வருமான வரித்துறை இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டி மூலம் இதுவரை வருமானம் ஈட்டியவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களின் வருமானத்தை வருமானவரிக்குள் கொண்டுவரும் முயறச்சியில் வருமான வரித்துறை இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்தான். அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோகரன்சியின் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் கிரிப்டோகரன்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் தாங்கள் ஈட்டிய வருமானத்தை வருமான வரித்துறையின் கணக்கில் கொண்டுவராமல் இருந்திருந்தால் அவற்றை சேகரிக்கும் முயற்சியில் வருமானவரித்துறை இறங்கியுள்ளது. 

கிரிப்டோக்கு மட்டும் மத்திய அரசு வரிவிதிக்கவில்லை. அதாவது ஊக வணிகத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அனைத்துக்கும் 30 சதவீத வரி நடைமுறையில் இருக்கிறது, அது தற்போது கிரிப்டோவுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அந்த வருமானத்தை கணக்கில் காட்டாதவர்கள் பட்டியலை சேகரித்து, வருமானவரி வளையத்துக்குள் கொண்டுவரும்முயற்சியில்வருமான வரித்துறை இறங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜேபி மொகபத்ரா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கிரிப்டோகரன்சி மூலம் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டிய ஏராளமானோர் அந்த வருமானத்தை வருமானவரித்துறையினரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்கள்.அவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து வருகிறோம். பலரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தது தொடர்பாக வருமானவரி ரிட்டனிலும் தெரிவிக்கவில்லை.

சிலர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்திருந்தாலும், கிரிப்டோ மூலம் கிடைத்த வருமானம் பற்றி குறிப்பிடவில்லை. இதனால் பல இடங்களில் உபரி வருமானம் இருப்பது கண்டறியப்பட்டு பெரிய இடைவெளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 30 சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ளதால், கிரிப்டோ வருமானத்தை அறிவிக்காதவர்கள் வருமானவரி வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள், அந்த பட்டியலை எடுத்து வருகிறோம். 

கடந்த 2017ம் ஆண்டிலிருந்து சிலர் சத்தமில்லாமல் முதலீடு செய்துவருகிறார்கள். அந்த ஆண்டிலிருந்து பட்டியலை சேசகரித்து வருகிறோம். ஏராளமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. 

அதேசமயம், 2022-23ம் நிதியாண்டு தொடங்கியபின் நடக்கும் கிரிப்டோ கரன்சிக்குத்தான் வரிவிதிப்பு செல்லும். அதற்கு முன்பு வருமானம் ஈட்டியிருந்தால் வரிவிதிக்கப்படாது. ஆனால், அதில் முதலீடு செய்தவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருமானவரி கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வருமானம் ஈட்டியிருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுமா என்பது குறித்து தெளிவான உத்தரவு இல்லை. அவ்வாறு ஏதேனும் வந்தால், அதுவும் வரிவிதிப்பில் வரும். 

இவ்வாறு மொகபத்ரா தெரிவித்தார்