நாட்டில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு தீரும் வரை ஸ்டேட் பேங்க்  ஆப் இந்தியா தனது கிளைகளை சிறிது காலத்துக்கு மூடி வைக்கலாம் என்று அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.ஓ.சி.) அமைப்பு தெரிவித்துள்ளது.

ரூபாய் தடை

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில்  பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த நவம்பர் 8-ந்தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தும், மாற்றியும் வேறு நோட்டுகளை பெற்றனர்.

வாக்குவாதம்

ஆனால், ெசல்லாத ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்ற அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடாததால், மக்கள் கேட்கும் அளவுக்கு பணத்தை வங்கிகளால் கொடுக்க இயலவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ. 4500, வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் என வங்கியில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறிய பின்பும், வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு போதுமான பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி போதுமான பணம் சப்ளை செய்யப்பட்டு விட்டது என்று கூறியபோதிலும், பணத்தட்டுப்பாடு தீரவில்லை.

பேட்டி

இந்நிலையில், சென்னையில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர்  தாமஸ் பிரான்கோ ராஜேந்திர தேவ் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

மோதல்கள்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு முடிந்து 60 நாட்கள் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை. வங்கியில் பணம் போதுமான அளவில் இல்லாததால், நாள்தோறும் பொது மக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், மோதல்களும் ஏற்படுகின்றன.

பணத்தட்டுப்பாடு சீரடைந்து, போதுமான பணம் கிடைக்கும் வரை பாரத ஸ்டேட்வங்கி தங்களது கிளைகளை மூடி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தற்காலிகமாக மூடுங்கள்

ஏனென்றால், பணத்தட்டுக்கு நாங்கள் காரணம் இல்லை என்ற போதிலும், தேவையில்லாமல், வங்கி அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது அதைத் தவிர்க்க வங்கிகளை தற்காலிகமாக மூடிவைக்கலாம்.

கூறவில்லை

மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகள் தங்களுக்கு பணத்தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகிறார்கள். ஆனால், இதே போன்ற கருத்தை மற்ற மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகள் கூறவில்லை.

ஏன் ரகசியம்

மாநில வாரியாக மற்றும் வங்கிகள் வாரியாக எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது என்பதை ரிசர்வ் வங்கி மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கும், மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்ட பணம் குறித்து சொல்வதில், ரிசர்வ்வங்கி அப்படி என்ன ரகசியம் காக்கிறது.

உண்மை வேறு

பணம்சப்ளை போதுமான அளவில் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெற்று அறிக்கை மட்டுமே வெளியிட்டு வருகிறது. கிராமங்களுக்கு பணம் அதிக அளவில் சப்ளைசெய்யப்பட்டு வருகிறது என்று கூறுகிறது. ஆனால், உண்மை என்பது வேறு.

பொங்கல் இல்லை

பெரும்பாலான எஸ்.பி.ஐ. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரேஷன் வைத்து பணத்தை சப்ளை செய்து வருகின்றன. பணத்தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் பொங்கல் திருநாளைக் கூட மக்கள் கொண்டாட முடியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.