சிப்லா நிறுவனம், நீரிழிவு நோயாளிகளுக்காக ஊசி இல்லாமல் மூச்சின் மூலம் உட்கொள்ளும் 'அஃப்ரெஸ்ஸா' என்ற இன்சுலினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிப்லா (Cipla) நிறுவனம், இந்தியாவில் ஊசி இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இன்சுலின் தயாரிப்பான அஃப்ரெஸ்ஸா-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிப்லா நிறுவன பங்குகள் சந்தையில் உயர்வுடன் தொடங்கின. நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் சிகிச்சை இது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த அஃப்ரெஸ்ஸா தயாரிப்பை இந்தியாவில் விநியோகிக்கவும், சந்தைப்படுத்தவும் சிப்லாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் Central Drugs Standard Control Organisation (CDSCO) அனுமதி வழங்கியது. இதன் மூலம், இந்தியாவில் ஊசி தேவையற்ற இன்சுலின் வழங்கும் முறையில் சிப்லா காலடி எடுத்து வைத்துள்ளது.

அஃப்ரெஸ்ஸா என்பது வேகமாக செயல்படும், வாய்வழி மூச்சின் மூலம் உட்கொள்ளும் இன்சுலின் ஆகும். வழக்கமான இன்ஜெக்ஷன் இன்சுலினுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 10 கோடி பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த தயாரிப்பு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்சுலின், ஒற்றை முறை பயன்பாட்டுக்கான கார்ட்ரிட்ஜ்களாக வழங்கப்படுகிறது. சிறிய இன்ஹேலர் கருவி மூலம், மருத்துவர் பரிந்துரைத்த அளவை மூச்சின் மூலம் உட்கொள்ள வேண்டும். பொதுவாக, நாளின் முக்கிய உணவுடன் சிகிச்சை தொடங்கி, நோயாளியின் தேவைக்கு ஏற்ப மாறலாம்.

இந்த அஃப்ரெஸ்ஸா தயாரிப்பை அமெரிக்காவை சேர்ந்த MannKind Corporation உருவாக்கி தயாரித்துள்ளது. மூச்சின் மூலம் உட்கொண்டதும், இது விரைவாக கரைந்து, சுமார் 12 நிமிடங்களில் ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது உடலின் இயற்கை இன்சுலின் நெருக்கமாக பின்பற்றுகிறது.

ஊசி பயம் மற்றும் தினசரி இன்ஜெக்ஷன் சிரமம் காரணமாக பலர் இன்சுலின் சிகிச்சையை தள்ளிப் போடுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த ஊசி இல்லா முறையால், அந்த மனஅழுத்தம் குறைந்து சிகிச்சை தொடர்ச்சியாக நடைபெறும் என சிப்லா நம்புகிறது.

இந்த அறிமுகம் குறித்து சிப்லாவின் உலகளாவிய தலைமை செயல்பாட்டு அதிகாரி அச்சின் குப்தா, தரமான சுகாதார சேவையை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் நோக்கம் என்றார். அஃப்ரெஸ்ஸா மூலம் இன்சுலின் சிகிச்சை எளிமையாகி, இந்தியாவில் கோடிக்கணக்கானோர் அதிக நம்பிக்கையுடன் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.