போஸ்ட் ஆபீஸ் காப்பீட்டுத் திட்டம்; தினமும் வெறும் ரூ. 6 செலுத்தி ரூ. 1 லட்சம் அள்ளலாம்!!
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் செய்யும் முதலீடுகளில், தபால் துறையின் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் சிறந்த தேர்வாகும். தினமும் ரூ.6 முதலீடு செய்தால் ரூ.1 லட்சம் பெறலாம். பாலிசிதாரர் இறந்தாலும் பிரிமியம் செலுத்துவது தள்ளுபடி செய்யப்படும்.
பெற்றோர் பலரும் குழந்தை பிறந்தவுடனே முதலீடு செய்யத் தொடங்கி விடுவார்கள். தங்களது குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி, நல்ல கல்வி செல்வத்தை வழங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
சேமிப்பு திட்டங்கள் பல இருந்தாலும், எந்த திட்டம் எவ்வாறு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்றுதான் இந்திய தபால் துறை அறிமுகம் செய்து இருக்கும் பால் ஜீவன் பீமா யோஜனா. இது உங்களது குழந்தைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பே நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியது இல்லை. தினமும் 6 ரூபாய் முதலீடு செய்தாலே போதும்.
பால் பீமா யோஜனா என்றால் என்ன?
போஸ்ட் ஆபீஸ் அல்லது தபால் அலுவகத்தின் பால் பீமா யோஜனா கிராமப்புற தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு தனித்துவமான காப்பீட்டுத் திட்டமாகும். பெற்றோர் இந்தத் திட்டத்தை குழந்தைகளுக்காக துவங்கலாம். ஆனால் தகுதி பெற பெற்றோர் 45 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் 45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது. பால் ஜீவன் காப்பீடு பெறுவதற்கு 5 முதல் 20 வயது வரையிலான குழந்தைகள் தகுதி பெறுகின்றனர். பெற்றோர்கள் இந்த திட்டத்தில் இரண்டு குழந்தைகளை சேர்க்கலாம்.
தினமும் ரூ.6 முதலீடு செய்தால் ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்
குழந்தை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு பிரிமியம் உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு தினமும் ரூ.6 அல்லது ரூ.18 பிரீமியத்தை தேர்வு செய்யலாம். பாலிசிதாரர் 5 ஆண்டு காலத்தை தேர்வு செய்தால், தினமும் ரூ. 6. பிரிமியம் செலுத்த வேண்டும். 20 ஆண்டுகள் தேர்வு செய்தால், தினமும் ரூ. 18 பிரிமியம் செலுத்த வேண்டும். பிரிமியம் செலுத்துவதற்கு மாதாந்திரம், காலாண்டு, இருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்று தேர்வு செய்யலாம். பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், உங்களது குழந்தைக்கு ரூ. 1 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறலாம்.
சலுகை என்ன?
இந்த திட்டம் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. பாலிசி முதிர்ச்சியடைவதற்கு முன் பாலிசிதாரர் (பெற்றோர்) இறந்துவிட்டால், பிரிமியம் செலுத்துவது தள்ளுபடி செய்யப்படும். அதாவது, பாலிசி எடுக்கப்பட்ட குழந்தை தொடர்ந்து பிரிமியம் செலுத்த வேண்டியதில்லை. 5 வருடங்கள் தொடர்ந்து பிரிமியம் செலுத்திய பிறகு, பிரிமியம் பாலிசியாக மாறும். கூடுதலாக, குழந்தை ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் உத்தரவாதமாக ரூ.48 வருடாந்திர போனஸாக பெறலாம். குழந்தைகளின் பெயரில் பெற்றோருக்கு காப்பீடு வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள தபால் அல்லது போஸ்ட் ஆபீஸ் ஆயுள் காப்பீட்டின் (பிஎல்ஐ) கீழ் உள்ள சில திட்டங்கள், "பால் ஜீவன் பீமா" போன்றவை, தனி நபரின் குழந்தைகளுக்கு வழங்குகின்றன. எல்ஐசியின் ஜீவன் தருண் என்பது குழந்தைகளை இலக்காகக் கொண்ட மற்றொரு திட்டமாகும். ஆனால் இது போன்ற குழந்தைகள் சார்ந்த திட்டங்கள் வெவ்வேறு பெயர்களில் இருக்கலாம். குறிப்பிட்ட மாநிலம் சார்ந்த பால் ஜீவன் பீமா யோஜனாக்களும் செயலில் இருக்கலாம். அவற்றையும் நீங்கள் சரிபார்த்து அந்த திட்டத்தில் சேரலாம்.