ஏடிஎம்மில் பணம் வராமல், அக்கவுண்டில் டெபிட் ஆகிவிட்டதா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
சில நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பனம் வராமல், அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்தம்
இப்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் நடந்து வருகிறது. ஆனாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஏடிஎம்மில் பணம் எடுத்து வருகிறோம். சில நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பனம் வராமல், அக்கவுண்ட்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் பலர் அதிர்ச்சியில் உறைந்து போவார்கள்.
பொதுவாக வங்கியில் இருந்து பணம் கழிக்கப்படும்போதும், ஏடிஎம் பணம் வழங்காமல் இருப்பதும் தொழில்நுட்ப கோளாறு அல்லது ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போகும்போது போன்ற சிக்கல்களால் ஏற்படுகிறது. வங்கியில் இருந்து பணம் கழிக்கப்பட்டாலும், ஏடிஎம் பணம் வழங்காதது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், நீங்கள் இனிமேல் இவற்றை செய்யுங்கள்.
புகார் தெரிவிக்கலாம்
வழக்கமாக ஒரு தவறான பரிவர்த்தனைக்குப் பிறகு உடனடியாக கணக்கில் பணம் திருப்பி அனுப்பப்படும். இருப்பினும், உங்கள் பணம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றால், நீங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்கலாம் அல்லது கிளைக்கு நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். ஆனாலும் உங்கள் பிரச்சினை மேலும் அதிகரித்து, குறைக்கு தீர்வு காணப்படாவிட்டால், ரிசர்வ் வங்கி போன்ற பெரிய வங்கிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
ஏடிஎம்மில் பணம் வராமல் அக்கவுண்டில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது குறித்து நீங்கள் நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் கொடுக்கலாம். நீங்கள் புகார் கொடுத்து நீண்ட நாட்களாக அந்த வங்கி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் என்ற கணக்கில் நீங்கள் இழப்பீடாக பெறும் வகையில் ஆர்பிஐ விதி உள்ளது.
ஆர்பிஐ விதி
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லது மற்ற வங்கியின் ஏடிஎம் என எந்த ஏடிஎம்மில் பணம் வராமல் அக்கவுண்டில் பணம் பிடிக்கப்பட்டு இருந்தாலும் உங்களுக்கு ஏடிஎம் கார்டு கொடுத்த வங்கியிடம் இதுகுறித்து நீங்கள் புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் கொடுத்த ஏழு வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிகள் அந்தப் பணத்தை மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டுக்கு கிரெடிட் செய்திருக்க வேண்டும்.
அப்படி உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் வங்கிகள் மெத்தனமாக இருந்தால் அந்த ஏழு நாட்களுக்கு பிறகு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ரூ.100 இழப்பீட்டு தொகையை வங்கி உங்கள் அக்கவுண்டுக்கு அனுப்ப வேண்டும். இதுதான் 2011ம் ஆண்டில் இருந்து ஆர்பிஐ அமலுக்கு கொண்டு வந்துள்ள விதியாகும். அதே வேளையில் ஏடிஎம்மில் பணம் வராத நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு புகார் அளித்திருக்க வேண்டும். 30 நாட்களை தாண்டிய புகார்கள் செல்லுபடியாகது என்பது குறிப்பிடத்தக்கது.