amazon union: அமெரிக்க அமேசான் நிறுவனத்தில் அமைகிறது முதல் தொழிற்சங்கம்: வாக்கெடுப்பில் முன்னாள் ஊழியர் வெற்றி
amazon union : அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ஸ்டேடன் ஐலாந்து பகுதியில் அமேசான் நிறுவனத்தில் முதல்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ஸ்டேடன் ஐலாந்து பகுதியில் அமேசான் நிறுவனத்தில் முதல்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 55 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்ததையடுத்து, முன்னாள் ஊழியர் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் தலைமையிலான குழுவுக்கு வெற்றி கிடைத்தது.
நியூயார்க்கில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் 55 சதவீத ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்க ஆதரவு அளித்தனர். இந்த வெற்றியின் மூலம் அமெரி்க்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் முதல் முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்படுகிறது.இது தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் சார்ந்த வழக்கறிஞர்களுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
1994ம் ஆண்டு அமேசான் நிறுவனம் நிறுவப்பட்டது. ஒரு நிறுவனம் முதல் தொழிற்சங்கத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படும். ஆனால் இதுவரை தொழிற்சங்கம் அமைக்க ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், அமேசானில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள், சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதிலும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு எந்தவசதியும் இல்லை எனக்கோரி உரிமைகளை நிலைநாட்ட தனியாக தொழிற்சங்கம் தேவை என்று தொழிலாளர்கள் உணர்ந்தனர்.
இதன்படி, நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கிறிஸ் ஸ்மால் தலைமையில் தொழிலார் சங்கத்தை அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இறுதியாக கடந்த மாதம் 6 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது.
தினசரி காலை 5மணிநேரம் மாலை 5 மணிநேரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு முடிவுகள் எண்ணப்பட்டதில் 55 சதவீத வாக்குகள் தொழிற்சங்கம் அமைக்க ஆதரவாக இருந்தன. தொழிற்சங்கம் அமைக்கப் போராடிய ஸ்மாலுக்குகிடைத்த வெற்றிக்கு, அமேசானுக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.
நியூயார்க் சேமிப்பு கிடங்கில் தொழிற்சங்கம் அமைக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. இப்போது இதேபோன்ற கோரிக்கை அலபாமாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் ஊழியர்கள் பெரும்பகுதியினர் தொழிற்சங்கம் வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
தொழிற்சங்கம் அமைக்கப்போராடி வெற்றி கண்ட கிறிஸ்டியன் ஸ்மால் கூறுகையில் “ அமேசான் சேமிப்புக் கிடங்கில் எங்களுக்கு ஓர் இடம் ஒதுக்கிய ஜெப் பிஜோஸுக்கு நன்றி தெரிவிக்கிறோம்”எனத் தெரிவித்தார்
நியூயார்க்கில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் மட்டுமே ஸ்மால் தலைமையில் புதிய தொழிற்சங்கம் அமைய இருக்கிறது. இது ஸ்மாலுக்கு தொடக்கம்தான் இனிமேல் பல்வேறு நகரங்களிலும் அவர் தொழிற்சங்கம் அமைப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்