ஏர்டெல் நிறுவனம் Perplexity AI உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட Perplexity Pro சந்தாவை இலவசமாக வழங்குகிறது. பல்வேறு AI வசதிகளை ரூ.17,000 மதிப்புள்ள இந்த சந்தா ஏர்டெல் Thanks செயலி மூலம் பெறலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளவில் வேகமான வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதில் முக்கியமான பெயராக Perplexity AI நிறுவனம் திகழ்கிறது. 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சமீபத்தில் “Comet” என்ற AI தேடுபொறியை அறிமுகப்படுத்தி, கூகுளுக்கு போட்டியளிக்கும் வகையில் தனக்கென இடம் பிடித்துள்ளது. மனிதர்களைப் போலவே கேள்விகளுக்குத் துல்லியமான பதில்கள் வழங்கும் திறனுடைய இந்தத் தேடுபொறி, பாரம்பரியமான தேடுபொறிகளை விட ஒரு படி மேலானதாக பலரும் கருதுகின்றனர்.
கைகோர்த்த இமயங்கள்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சந்தையை புரிந்த Perplexity நிறுவனம், இப்போது இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெலுடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தற்போது ஒரு வருடத்திற்கு Perplexity Pro AI சந்தாவை இலவசமாகப் பெறலாம்.
பயனாளிகளுக்கு என்ன லாபம்?
Perplexity Pro என்பது பல்வேறு நவீன AI வசதிகளை வழங்கக்கூடிய ஒரு தொழில்நுட்ப சேவையாகும். இதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- படங்கள் உருவாக்கம்
- டாக்குமெண்ட் அப்லோட் செய்து அதன் உள்ளடக்கம் பகுப்பாய்வு செய்தல்
- மின்னஞ்சல்களை வாசித்துப் புரிந்துகொள்ளும் திறன்
- ஆய்வுக்கான தரவுகள் சேகரித்து வழங்கும் வசதி
- தொழில், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளுக்கேற்ப தனிப்பயன் பதில்கள்
இந்த வசதிகளை பெறுவதற்கு வழக்கமாக ஆண்டுக்கு ரூ.17,000 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இப்போது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் மொபைல், ப்ராட்பேண்ட் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையைப் பெறலாம்.
ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் எளிதாக பெறலாம்
இந்த சந்தாவை பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் “Airtel Thanks” செயலியில் செல்ல வேண்டும். அங்கு தங்கள் கணக்கில் லாகின் செய்து, "Rewards" பகுதியை கிளிக் செய்தாலே Perplexity Pro சந்தா செயல்படுத்தப்படலாம்.
360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை!
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், ஏர்டெல் நிறுவனத்தின் 360 மில்லியன் வாடிக்கையாளர்கள் Perplexity AI Pro சேவையை எந்தவித கட்டணமும் இல்லாமல் அனுபவிக்கவிருக்கின்றனர். இந்த அறிவிப்பின் போது, ஏர்டெல் துணைத் தலைவர் கோபால் விட்டெல் மற்றும் Perplexity AI நிறுவனத்தின் கூட்டுத் தலைவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இருவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் என அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். தொழில்நுட்பத்தை எளிமையாக அணுகும் வாய்ப்பு கிடைக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவில் AI பயன்பாட்டின் பரவலையும் வேகமாக விரிவாக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
