8-வது ஊதியக் குழு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக் குழு வந்தால் பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

8-வது ஊதியக் குழு குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. புதிய ஊதியக் குழு அமலுக்கு வந்தால் பென்ஷன் எவ்வளவு உயரும்? தற்போது 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை அடிப்படை பென்ஷன் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? இதற்கான உத்தேச கணக்கீடு இப்போது வெளியாகியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிக்கையின்படி, 2.0, 2.25 மற்றும் 2.57 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர்களை (Fitment Factor) வைத்து பென்ஷன் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர்கள் எதையும் மத்திய அரசோ அல்லது 8-வது ஊதியக் குழுவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது வெறும் உத்தேச கணக்கீடு மட்டுமே.

8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் எப்படி உயரும்?

பழைய அடிப்படை பென்ஷனை புதிய அடிப்படை பென்ஷனாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒரு அளவுகோல்தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர். இது 2.0 ஆக இருந்தால், உங்களின் தற்போதைய அடிப்படை பென்ஷன் அப்படியே டபுள் ஆகும். அதுவே 2.25 ஆக இருந்தால் 2.25 மடங்கும், 2.57 ஆக இருந்தால் 2.57 மடங்கும் பென்ஷன் அதிகரிக்கும்.

25 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்கினால் எவ்வளவு கிடைக்கும்?

தற்போது ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் 25,000 ரூபாய் அடிப்படை பென்ஷன் வாங்குகிறார் என்றால், உத்தேச கணக்கீட்டின்படி:

2.0 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.50,000

2.25 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.56,250

2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.64,250

அதாவது, எந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் முடிவாகிறதோ அதைப் பொறுத்து பென்ஷன் தொகையில் பெரிய மாற்றம் இருக்கும்.

50 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்கினால் எவ்வளவு கிடைக்கும்?

தற்போது 50,000 ரூபாய் அடிப்படை பென்ஷன் வாங்குபவர்களுக்கான உத்தேச கணக்கீடு:

2.0 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,00,000

2.25 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,12,500

2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,28,500

75 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்கினால் எவ்வளவு கிடைக்கும்?

தற்போது 75,000 ரூபாய் அடிப்படை பென்ஷன் வாங்கும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இந்தத் தொகை இன்னும் பெரிதாக இருக்கும்.

2.0 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,50,000

2.25 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,68,750

2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர்: ரூ.1,92,750

பென்ஷனை உயர்த்த ஊழியர் சங்கங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

8-வது ஊதியக் குழுவிடம் பல்வேறு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளத்தில் 67 சதவீதத்தை பென்ஷனாக தர வேண்டும் என NC-JCM உள்ளிட்ட சங்கங்கள் கோருகின்றன. குடும்ப ஓய்வூதியத்தை 50 சதவீதமாக உயர்த்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதுள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி (OPS), கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளம் அல்லது ஓய்வு பெறுவதற்கு முந்தைய 10 மாத சராசரி சம்பளம், இதில் எது அதிகமோ அதில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதமாக உள்ளது. இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.

பென்ஷன் உயர்வு எப்போது முடிவாகும்?

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வந்து, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே உண்மையான பென்ஷன் தொகை எவ்வளவு எனத் தெரியவரும். எனவே, இப்போதே 2.0 அல்லது 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் உறுதியாகிவிட்டது என நினைக்க வேண்டாம். இறுதி முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும்.