விமான நிலையங்களை கபளீகரம் செய்த அதானி குரூப் !! 5 விமான நிலையங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது !!
இந்தியாவில் உள்ள 6 முக்கிய விமான நிலைய நிர்வாக பொறுப்பை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க முடிவெடுத்துள்ள நிலையில் முதல்கட்டமாக 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பை அதானி நிறுவனம் ஏற்றுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பணியில் தனியாரையும் இணைத்துக் கொள்ள கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான முதலீட்டை 100 சதவீதம் தனியார் நிறுவனங்களே செய்யும் என்றும். அதேசமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 6 விமான நிலையங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.
இதில் 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை சாதகமான தொகையை அதானி நிறுவனம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 5 விமான நிலையங்களும் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. கவுகாத்தி நிறுவனத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் இன்னமும் திறந்து பார்க்கப்படவில்லை.
ஏற்கெனவே தனியார் துறைமுகங்களில் கால் பதித்து வரும் அதானி நிறுவனம் தற்போது விமான நிலையங்களையும் கபளீகரம் செய்து வருகிறது.