MG ZS EV facelift : எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் 2022 எம்.ஜி. ZS EV மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் 2022 எம்.ஜி. ZS EV மாடலை மார்ச் 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் அறிமுக நிகழ்வு மார்ச் 7, மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. புதிய மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் வகையில் சில புகைப்படங்களை எம்.ஜி. மோட்டார்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டு ஆடம்பர அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
2022 எம்.ஜி. ZS EV மாடல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹலோல் உற்பத்தி ஆலையில் இருந்து விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். அம்சங்களை போன்றே புதிய காரின் விலையிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடலின் முன்புறம் எக்லோஸ் செய்யப்பட்ட கிரில், சார்ஜிங் சாக்கெட் எம்.ஜி. லோகோவின் அருகில் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
முன்புற பம்ப்பர் ரி-டிசைன் செய்யப்பட்டு கூர்மையாக காட்சியளிக்கிறது. இத்துடன் அகலமான ஏர் டேம், இருபுறங்களிலும் வெர்டிக்கல் இண்டேக்குகள் உள்ளன. புதிய எம்.ஜி. ZS EV மாடலில் ரி-டிசைன் செய்யப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் புதிய டெயில் லேம்ப் டிசைன், பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லண்டன்-ஐ ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்..இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்..இ.டி. டெயில் லைட்கள், ரியர் ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் உள்ளன.

உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆறு ஏர்பேக், ஹில் ஸ்டார்ட்/டிசெண்ட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2022 எம்.ஜி. ZS EV மாடலில் 44.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் மோட்டார் 141 ஹெச்.பி.திறன், 353 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 419 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய ZS EV மாடலில் 50 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த யூனிட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதே பேட்டரி யூனிட் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்பட்ட எம்.ஜி. ZS EV மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
