நவம்பர் 2025-ல் ராயல் என்பீல்ட் 25.15% மொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சில மாடல்களின் விற்பனை சரிந்தபோதிலும், இந்த முக்கிய மாடல்களின் வலுவான செயல்திறன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனித்த அடையாளம் கொண்ட ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பிரபலத்தைக் நவம்பர் 2025 விற்பனை புள்ளிவிவரங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்த மாதத்தில் ராயல் என்ஃபீல்டின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக கிளாசிக் 350 திகழ்ந்தது. மொத்தம் 34,793 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 26.46% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நவம்பர் 2024-ல் இந்த மாடல் 27,514 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

விற்பனை பட்டியலில் இரண்டாவது இடத்தை ஹண்டர் 350 பிடித்துள்ளது. இந்த மாடல் 20,793 யூனிட்கள் விற்பனையாகி, 36.53% என்ற கனிசமான ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் புல்லட் 350 உள்ளது. இது 20,547 யூனிட்கள் விற்பனையாகி, 26.89% வளர்ச்சியுடன் நிலையான தேவை இருப்பதைக் காட்டுகிறது. இந்த மூன்று மாடல்களும் ராயல் என்ஃபீல்டின் விற்பனைக்கு முக்கிய தூண்களாக தொடர்கின்றன.

இதற்கிடையில், சில மாடல்கள் கலவையான முடிவுகளை சந்தித்துள்ளன. மீட்டியார் 350 40.52% ஆண்டு வளர்ச்சியுடன் 1,091 யூனிட்கள் விற்பனையாகி நல்ல முன்னேற்றம் காட்டியது. ஆனால் 650 ட்வின் மாடலின் விற்பனை 40.62% சரிந்து 1,766 யூனிட்களாக குறைந்தது. மேலும், ஹிமாலயன் மாடலும் 20.40% ஆண்டு சரிவை சந்தித்து 1,221 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

மேலும், கெரில்லா மாடல் 16.81% சரிவுடன் 663 யூனிட்களாக குறைந்தது. சூப்பர் மீட்டியார் விற்பனையும் 24.96% குறைந்து 439 யூனிட்களாக இருந்தது. ஷாட்கன் மாடல் மிகவும் குறைந்த விற்பனையுடன் 93 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு, கடந்த ஆண்டை விட 59.39% பெரிய சரிவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், நவம்பர் 2025-ல் ராயல் என்ஃபீல்டு 90,405 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து, ஆண்டுக்கு 25.15% மொத்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிளாசிக் மற்றும் ஸ்டைலான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான வலுவான நம்பிக்கையையும் தொடர்ந்த தேவை இருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.