மேம்பட்ட இடவசதி, 12.3 அங்குல பனோரமிக் டிஸ்ப்ளே மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற புதிய அம்சங்களுடன் இந்த எஸ்யூவி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஹூண்டாய் இந்திய சந்தையில் தனது புதிய தலைமுறை வென்யூ எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சில வாரங்களிலேயே இந்த கார் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹூண்டாய் வெளியிட்ட தகவல்படி, புதிய வென்யூவிற்கு 32,000-க்கும் மேற்பட்ட புக்கிங்குகள் வந்துள்ளன. இதனால், இந்திய வாடிக்கையாளர்களிடையே இந்த மாதலுக்கு உருவான நம்பிக்கை மற்றும் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. புதிய வென்யூவின் ஆரம்ப விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

பாரம்பரிய வடிவமைப்பில் இருந்த பழைய மாடலை ஒப்பிடுகையில், புதிய தலைமுறை வென்யூ மிகவும் நவீனமாக உள்ளது. இந்த எஸ்யூவி தற்போது அளவில் பெரியதாகவும், ஸ்டைலான தோற்றத்துடனும் கிடைக்கிறது. 3,995 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம், 1,665 மிமீ உயரம் மற்றும் 2,520 மிமீ வீல்பேஸை கொண்ட இந்த வாகனம், பழைய மாடலை விட அகலத்தில் 30 மிமீ மற்றும் வீல்பேஸில் 20 மிமீ அதிகரித்துள்ளது. இதனால், உள் பகுதியில் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பில் ஹூண்டாய் பல மேம்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அல்காசர் மற்றும் எக்ஸ்டர் போன்ற பெரிய எஸ்யூவி-களில் இருந்து கோலங்கள் பெறப்பட்டுள்ளன. பெரிய ரேடியேட்டர் கிரில், ஸ்லிம் எல்இடி ஹெட்லெம்ப்கள், நீளமான எல்இடி டிஆர்எல்கள், மஸ்குலர் வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள், பின்புற கிடைமட்ட எல்இடி விளக்குகள் போன்றவை அம்சங்கள் வாகனத்தை சாலையில் தனித்தன்மையுடன் காட்டுகின்றன.

இந்த முறை ஹூண்டாய் வென்யூவின் இன்டீரியரிலும் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டூயல் டோன் நேவி + கிரே இன்டீரியர், லெதரெட் சீடுகள், மிதக்கும் டேபிள் ஸ்டைல் ​​சென்டர் கன்சோல் போன்ற அமைப்புகள் எஸ்யூவிக்கு கூடுதல் பிரீமியம் உணர்வை உருவாக்குகிறது. 12.3+12.3 அங்குல வளைந்த பனோரமிக் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் சீடுகள், வயர்லெஸ் சார்ஜிங், எலக்ட்ரிக் டிரைவர் சீட் அட்ஜஸ்ட், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை இந்த செக்மென்ட்டில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

புதிய வென்யூவில் இன்ஜின் ஆப்ஷன்கள் முன்னாடி இருந்தவையே தொடர்கின்றன, ஆனால் டிரான்ஸ்மிஷன் பகுதியில் முக்கியமான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (82bhp / 114Nm), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று விருப்பங்கள் உள்ளன. பெரும் மாற்றமாக டீசல் மாடல் இப்போது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வசதியையும் பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூ புதிய தலைமுறை எஸ்யூவி, வடிவமைப்பு, அம்சங்கள், இன்ஜின் மேம்பாடு மற்றும் விலை ஆகிய அனைத்திலும் புது தரத்தை உருவாக்கியுள்ளது. இதனால், கம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் இரண்டாம் தலைமுறை வென்யூ மீண்டும் போட்டியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.