புதிய ஜிஎஸ்டி 2.0 வரி அமைப்பு நடைமுறைக்கு வந்ததால், மஹிந்திரா தனது பிரபலமான XUV700 எஸ்யூவியின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது.
செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 வரி கட்டமைப்பின் கீழ், அனைத்து வகை கார்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக விதிக்கப்பட்டிருந்த செஸ் வரியும் நீக்கப்பட்டதால், ஆட்டோமொபைல் துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக அடுத்த சில மாதங்களில் பல கார் மாடல்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி குறைப்பின் நன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் முன்னிலையாகியுள்ளது. குறிப்பாக பிரபலமான எஸ்யூவி மாடல் XUV700-ன் விலையை நிறுவனம் குறைத்து தெரிவித்துள்ளது. வேரியண்ட்டுக்கு ஏற்ப விலை குறைப்பு மாறுபடும் நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளிவந்த விவரங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.
XUV700-வின் எம்எக்ஸ் வேரியண்ட் ரூ.88,900 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஈஎக்ஸ்3 மாடலில் ரூ.1,06,500 தள்ளுபடி, ஈஎக்ஸ்5 எஸ் வேரியண்டில் ரூ.1,10,200 தள்ளுபடி. அதேசமயம், ஈஎக்ஸ்5-ல் ரூ.1,18,300 குறைப்பு, ஈஎக்ஸ்7-ல் ரூ.1,31,900, மேலும் ஈஎக்ஸ்7 எல் வேரியண்டில் ரூ.1,43,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துல்லியமான விலைப்பட்டியல் ஒவ்வொரு ஷோரூமிலும் மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள மஹிந்திரா டீலரை நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள் கொள்ள வேண்டும்.
முன்பு, 4,000 மிமீ நீளம் மற்றும் 1,500 சிசிக்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட கார்கள் மீது 28% ஜிஎஸ்டி மற்றும் 20% செஸ் சேர்த்து மொத்தம் 48% வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி 2.0 நடைமுறையில், இப்போது 40% வரி மட்டுமே பொருந்துகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மொத்தத்தில் எட்டு சதவீதம் வரை சேமிப்பு கிடைக்கும்.
தற்போது மஹிந்திரா XUV700-வின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.25.89 லட்சம் வரை உள்ளது. வரி குறைப்பின் தாக்கத்தால், வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் இந்த எஸ்யூவியை இனி குறைந்த விலையில் பெற வாய்ப்பு உள்ளது.
