இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஏர் டாக்சியை அறிமுகப்படுத்திய சர்லா ஏவியேஷன்!
India's First Electric Air Taxi: சர்லா ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஏர் டாக்ஸியான ஷுன்யாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2028-ல் பெங்களூருவில் பயன்பாட்டுக்கு வரும் இந்த ஏர் டாக்ஸி, நகர்ப்புற போக்குவரத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்லா ஏவியேஷன், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸியான ஷுன்யாவை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஆகும்.
இந்த ஏர் டாக்சி 2028ஆம் ஆண்டு பெங்களூருவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
ஷுன்யா ஏர் டாக்சி சந்தையில் அதிக பேலோடு கொண்ட eVTOL வாகனமாக இருக்கும். இதில் ஆறு பயணிகள் வரை பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 680 கிலோ பேலோடை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 20-30 கிமீ வரையிலான குறுகிய பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும் இந்த வாகனம் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும்.
இந்த மின்சார ஏர் டாக்சி நெரிசலான நகர்ப்புறங்களில் பயண நேரத்தைக் குறைப்பதற்கான தீர்வை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
மாதம் ஒரு லட்சம் பென்ஷன்! NPS திட்டத்தில் ஸ்மார்ட்டா முதலீடு செய்யுங்க!
"போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சவால்களை எதிர்கொள்வதன் மூலம், தூய்மையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். அதே வேளையில் இந்தியாவின் பொருளாதாரத் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று சர்லா ஏவியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் அட்ரியன் ஷ்மிட் கூறியுள்ளார்.
"எங்கள் பயணம் தன்னிறைவு கொண்ட பாரதத்தை உருவாக்கும் கொள்கையில் வேரூன்றியுள்ளது. உலக அளவிலான விமானப் போக்குவரத்து கண்டுபிடிப்புகளில் இந்தியாவை முன்னணியில் வைக்கவும், உள்நாட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை உருவாக்கவும் பணியாற்றுகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் மற்றும் ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் சர்லா ஏவியேஷன் அறிவித்துள்ளது. இந்த நிதியானது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, அதிநவீன R&D மையத்தை நிறுவ உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, நகர்ப்புறங்களில் விரைவான மருத்துவ சிகிச்சையை வழங்க இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சர்லா ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரீசார்ஜ் செய்யாமலே சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும்! டிராய் விதி என்ன தெரியுமா?