shani dosha: ஒருவரின் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அது பல்வேறு சவால்களையும், தடைகளையும் ஏற்படுத்தக்கூடும். சனி தோஷத்தின் அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி தோஷம்
சனி தோஷம் என்பது ஒரு நபரின் ஜாதகத்தில் சனி கிரகம் பலவீனமாகவோ அல்லது தவறான நிலையில் அமர்ந்திருக்கும் போதோ ஏற்படும் நிலையாகும். சனிபகவான் நீதி, கடின உழைப்பு, ஒழுக்கம், பொறுமை ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். ஆனால் சனி பகவான் சரியாக இடத்தில் இல்லாவிட்டால் வாழ்க்கையில் தடைகள், தாமதங்கள், மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகள் உருவாகலாம். சனி தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் சனி கிரகம் 1,4,7,10 ஆகிய வீடுகளில் இருக்கும் பொழுது அல்லது சந்திரனுடன் இணைந்து இருக்கும் பொழுது ஏற்படுகிறது.
சனி தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்:
சனி தோஷம் இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.
1.வாழ்க்கையில் தொடர்ச்சியான தடைகள்: எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் தொடர்ந்து தோல்விகள், தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்படலாம். தொழில், கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை என முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம்.
2.நிதி சிக்கல்கள்: பணப் பற்றாக்குறை, எதிர்பாராத செலவுகள் அல்லது கடன் சுமை அதிகரிக்கலாம். முதலீடுகள் அல்லது வணிகத்தில் இழப்புகளை சந்திக்கலாம்.
3.உளவியல் பிரச்சனைகள்: தேவையில்லாத பயம், காரணம் இல்லாத பதற்றம், அதிக மனச்சோர்வு, தனிமை உணர்வு ஏற்படலாம். தூக்கமின்மை அல்லது கனவுகளில் அச்சுறுத்தல் உணர்வு ஏற்படலாம்.
4.குடும்பத்தில் பிரச்சனைகள்: குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள், உறவுகளில் பதற்றம் ஏற்படலாம். திருமணத்தில் தொடர் தாமதம் அல்லது திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகலாம்.
5. ஆரோக்கிய குறைபாடுகள்: மூட்டு வலி, பற்கள் அல்லது எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நாள்பட்ட நோய்கள் உருவாகலாம். அதிக உடல் சோர்வு, ஆற்றல் குறைவு அடிக்கடி ஏற்படலாம்.
6.வேலையில் சிக்கல்கள்: வேலையில் பதவி உயர்வு தாமதம் ஆகுதல் அல்லது அடிக்கடி வேலை இழப்பை சந்தித்தல், உயர் அதிகாரிகளுடன் பிரச்சனை அல்லது பணியிடத்தில் மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்கலாம்.
சனி தோஷத்தை உறுதிபடுத்தும் வழிகள்
- சனி தோஷம் இருப்பதை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகி, ஜாதகத்தை ஆய்வு செய்யுங்கள்.
- சனி கிரகத்தின் அமைப்பு, அதன் பலம், பிற கிரகங்களுடன் உறவை குறித்து ஆராய்ந்து சனி தோஷத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
- சனி மற்றும் சந்திரன் ஒரே வீட்டில் இருப்பது அல்லது சனி 1,4,7,10 ஆகிய வீடுகளில் இருப்பது சனிதோஷத்தை குறிக்கும்.
- உங்கள் ஜாதகத்தில் சனியின் தசா புத்தி நடைபெறுகிறதா என்பதை சரிபார்க்கவும். இந்த காலகட்டத்தில் சனி தோஷத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
- சனி கிரகம் ஒருவரின் ராசியில், அதற்கு முன்பு அல்லது பின்பு உள்ள ராசிகளில் பயணிக்கும் காலத்தில் சனியின் தோஷத்தில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும்.
- வாழ்க்கையில் நிகழும் தொடர் பிரச்சனைகள் தாமதங்கள் அல்லது மன அழுத்தம் சனி தோஷத்தின் அறிகுறிகள் ஆகும்.
சனி தோஷத்தை குறைக்கும் பரிகாரங்கள்
சனி தோஷம் உங்களுக்கு இருப்பதாக தெரிந்தால் ஜோதிடரின் ஆலோசனைப்படி பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
- சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடுதல், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் வழிபாடு செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
- “ஓம் சனைச்சராய நமஹ:” என்கிற மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிக்கலாம்.
- கருப்பு எள், கருப்பு துணி, இரும்புப. பொருட்கள் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.
- சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம்.
- ஜோதிடரின் ஆலோசனையின் பெயரில் சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நீலமணி அணியலாம்.
- சனி கிரகத்திற்கு ஹோமம் செய்வது தோஷத்தின் தாக்கத்தை குறைக்க உதவும்.
சனி தோஷம் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தக்கூடிய ஜோதிட நிலையாகும். இதை முறையான ஜோதிட ஆலோசனை மற்றும் பரிகாரங்களில் மூலம் கட்டுப்படுத்த முடியும். உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு தகுதியான ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது முக்கியம். மேலும் சனிபகவானின் அருளைப் பெற வேண்டுமானால், ஒழுக்கமான வாழ்க்கை முறை, கடின உழைப்பு, பொறுமையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
