சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

அஷ்டமத்து சனி காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது என்பார். தொழில் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் நஷ்டமாகும். காரணம் பேராசையால் செய்யும் காரியமே பெருநஷ்டத்திற்கும் காரணமாகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு சில எளிமையான பரிகாரங்களை சித்தர்கள் கூறியுள்ளனர். அவற்றை நம்பிக்கையோடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் தீரும்.

Sani Peyarchi palan 2024 Tamil : Astamathu Sani simple remedies

சனி தரும் சங்கடங்கள்:
பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

அள்ளித்தரும் சனி:
சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது.

கொடுக்கும் சனி கெடுக்கும் சனி:
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை” என்றும், “சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்” என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

Guru Vakra Peyarchi 2024: கொட்டிக்கொடுக்கப்போகும் குரு; தீபாவளிக்கு முன் 6 ராசிக்காரர்களுக்கு அதிரடி சரவெடி!!

அஷ்டமத்து சனி:
ஒருவரின் ராசியில் கோச்சார ரீதியாக சனிபகவான் எட்டாம் இடத்தில் பயணம் செய்வது அஷ்டமத்து சனி காலம். இந்த கால கட்டத்தில் பண விசயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தற்போது அஷ்டம சனி காலமாகும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை ஏற்படும் அதற்காக அவசரப்பட்டு வேலையை விடக்கூடாது. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும்.

என்ன செய்யக்கூடாது:
பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக போங்க.
டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது.  குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள். பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

சனி தோஷம் நீக்கும் மந்திரம்:
சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சனி மந்திரம் கூறி வழிபடலாம்.

நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

சனிக்கிழமை விரதம்:
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

நல்லெண்ணெய் தீபம்:
சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண வேண்டும். சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வபத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள் செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.

அன்னதானம்:
சனிபகவான் பரிகார கோவிலான திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம்.

சனி பகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்க.. சனி தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை, அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios