Navratri 5th day puja in tamil: நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம், பூஜை முறை மற்றும் நைவேத்யங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நவராத்திரி 5வது நாள்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையின் 9 வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் ஐந்தாவது நாள் ‘மகா பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஸ்கந்த மாதா தேவியை வழிபடுவது வழக்கம். இந்த கட்டுரையில் ஸ்கந்த மாதாவை பற்றியும், அவரை வழிபடுவதற்கான பூஜை முறைகள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.
ஸ்கந்த மாதா
ஸ்கந்த மாதா அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமாக கருதப்படுகிறார். இவர் முருகன் (கார்த்திகேயன் அல்லது ஸ்கந்தன்) தெய்வத்தின் தாயாக விளங்குகிறார். ஸ்கந்தன் என்றால் முருகன், மாதா என்றால் தாய் என்று பொருள்படும். இவர் அன்பு, கருணை, மற்றும் தாய்மையின் அடையாளமாக விளங்குகிறார். இவரது வாகனம் சிங்கமாகும். நான்கு கைகளுடன் வலது கையில் தாமரை மலர், இடது கையில் முருகனைத் தாங்கியவாறு மற்ற கையில் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஸ்கந்த மாதா வழிபாட்டின் பலன்கள்
ஸ்கந்த மாதாவை வழிபடுவதால் பக்தர்களுக்கு மன அமைதி, ஆன்மீக வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் நல்லுறவு கிடைக்கும். குறிப்பாக குழந்தைகளின் நலனுக்காகவும், தாய்மையின் ஆசீர்வாதத்திற்காகவும் ஸ்கந்த மாதா வணங்கப்படுகிறார். மகா பஞ்சமி நாளில் ஸ்கந்த மாதாவை வணங்குபவர்களுக்கு மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகா பஞ்சமி நாளில் செய்யப்படும் பூஜைகள் குடும்ப ஒற்றுமை மற்றும் செழிப்பை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
பூஜை முறைகள்
நவராத்திரி பூஜைகள் பெரும்பாலும் மாலை வேலைகளிலேயே செய்யப்படுகின்றன. ஸ்கந்த மாதா பூஜையும் மாலை வேலையில் செய்வது நன்மைகளைத் தரும். பூஜை அறையில் ஸ்கந்த மாதா படம் அல்லது சிலையை வைத்து மலர் மற்றும் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். அவருக்கு தாமரை மலர்கள், பழங்கள், இனிப்பு நைவேத்யங்கள், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை படைத்து சந்தனம், குங்குமம் இட்டு தீப தூபாரதனை காட்ட வேண்டும். கலசத்தில் தேவியை ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
“ஓம் தேவி ஸ்கந்த மாதாயை நமஹ:” என்கிற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் ஸ்கந்த மாதாவிற்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து பூஜையின் முடிவில் கற்பூர ஆரத்தி காட்டி தேவியை வணங்க வேண்டும். இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது குழந்தை பேறு வழங்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் மற்றும் பால் உணவுகளை மட்டும் உட்கொள்ளலாம். ஸ்கந்த மாதாவிடம் குடும்ப நலன், குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்யலாம். அன்னையின் உருவம் அல்லது சிலை இல்லாதவர்கள் அவரின் திருவுருவத்தை நினைத்து கலசத்தில் அவரை ஆவாஹனம் செய்து பிரார்த்தனை செய்யலாம்.
அன்னையின் அருளைப் பெறுங்கள்
மனதில் உண்மையான பக்தியும், தூய்மையும், முழு ஈடுபாட்டுடனும் இந்த பூஜையை செய்பவர்களுக்கு ஸ்கந்த மாதா தனது அருளை வாரி வழங்குவார். குழந்தை வரம் வேண்டி தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரத்தை அருளுவார். ஸ்கந்த மாதா வழிபாடு குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும். பக்தர்களுக்கு ஆன்மீக உயர்வையும், குடும்பத்தில் அமைதியும், செழிப்பையும் தரும். மேற்கூறிய முறைகளை பின்பற்றி ஸ்கந்த மாதாவின் அருளைப் பெறுங்கள். இந்த வழிபாடு உங்கள் மனதையும், வாழ்க்கையையும் ஒளிமயமாகட்டும்.
