May 23, 2024, 12:55 PM IST
கொட்டும் மழை- உயரும் நீர் வரத்து
தமிழகத்தில் கடந்த 4 மாதமாக வெயிலானது வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது கோடை மழையாது வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக தமிழக்த்தில் உள்ள முக்கிய அணைகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி, குன்னூர், ஊட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
மே மாதம் தொடக்கத்தில் 50 அடிக்கும் கீழே சென்ற பில்லூர் அணை தற்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியுள்ளது. இதனால் கடந்த 3 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி பணிகள் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து சுமார் 6000 கனஅடி நீர் கீழ் மதகு வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம் ஓடத்துறை, லிங்காபுரம், சிறுமுகை, காந்தவயல், ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவும் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.