ஆத்தாடி எத்ததண்டி; தென்காசியில் தனியார் பண்ணையில் உலா வந்த 15 அடி நீள ராஜ நாகம் மீட்பு

Nov 17, 2023, 11:42 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரி என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்வதை பண்ணையில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பெயரில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வன காவலர்கள் கண்ணன், பசுங்கிளி, வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், மாரியப்பன், மனோகரன், சக்திமுருகன் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு புதரில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளமுள்ள ஆண் ராஜநாக பாம்பை போராடி மீட்டனர்.

தொடர்ந்து கோவிந்த பேரி பீட்டிற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகப் பாம்பை பத்திரமாக விட்டனர். ஏற்கனவே சமீபத்தில் பாபநாசம் பகுதியில் இதுபோன்ற ராஜநாகம் ஒன்று பிடிக்கப்பட்டது. தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் இதுபோன்று தொடர்ச்சியாக ராஜநாகம் பாம்பு பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.