உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்

Jan 29, 2024, 4:28 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது தமிழக, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. அப்பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகவே உதகை போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையால் கடந்த மூன்று நாட்களாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில இளைஞர்கள் சிலர் ஒரு சொகுசு காரில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு  Google Map உதவியுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் அருகே வரும்போது Google Map காட்டிய சாலையில் சென்றுள்ளனர். குறிப்பாக கூடலூர் காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அவர்கள் அங்கிருந்து விரைவாக செல்லக்கூடிய சாலையென  Google Mapல் காட்டிய பாதையில் சென்ற நிலையில், அந்தப் பாதையானது செங்குத்தான படிகட்டுகள் நிறைந்த மக்கள் வசிக்கும்  பகுதிக்கு செல்லக்கூடிய பாதையாக இருந்தது. 

திடீரென படிக்கட்டுகள் வந்ததால் காரில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்  திகைத்துப் போயினர். இதனை அறிந்த அந்த கார் ஓட்டுநர் சொகுசு காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தியவாறு காரில் இருந்து இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் வந்த பிற சுற்றுலா பயணிகள் அனைவரும் இணைந்து படிக்கட்டுகளில்  பாறை துண்டுகளை அடுக்கி வைத்து ஒரு வழியாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகனத்தை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். பிறகு நிம்மதி அடைந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பினர்.