பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

Jan 29, 2024, 11:11 AM IST

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக  நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனி பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில் தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும், கடும் குளிர் நிலவும், இதனால் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரிக்கும் குறைவாக செல்லும். இந்நிலையில் இந்தாண்டு  மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் உறை பனி தாக்கம் தாமதமாக துவங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று நகரின் பல பகுதிகளில் உறைபனியின் தாக்கம்  காணப்பட்டது. குறிப்பாக உதகை குதிரை பந்தய மைதானம், காந்தல் பேருந்து நிலையம், முக்கோணம், தலைக்குந்தா, கேத்தி, லவ்டேல் பள்ளத்தாக்கு  உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளில் மைதானம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உறைப்பனி படர்ந்து காணப்பட்டது. இதனால், தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள், புல்வெளிகள் போன்றவை  வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டன. 

மேலும் உறை பனி காரணமாக அதிகாலை விவசாய பணிகளுக்கு செல்பவர்கள், நடைபயணம் மேற்கொள்பவர்கள், தூய்மை பணியாளர்கள் என பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.