Feb 24, 2023, 1:14 PM IST
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளியான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசித்து வருகிறார். சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இவரால் சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாமல் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், அதே உயரத்தில் உள்ள பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரை பார்க்க சென்ற சசிக்குமாருக்கு அவரை பிடித்துப் போக அவரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வ.உ.சி தெருவை சார்ந்த சாந்திக்கும், சசிக்குமாருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ மாற்றுத் திறனாளிகளான மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் அவர்களை வாழ்த்திச் சென்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாமும் 100 ஆண்டு காலம் வாழ அவர்களை வாழ்த்துவோம்.