Aug 21, 2019, 6:31 PM IST
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீரை விவசாய தேவைக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழக முதல்சர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைத்தார்.
அந்த நீரானது கடந்த 15ம் தேதி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அணைக்கு வந்த நீரை அப்படியே திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர் கல்லணையை அடைந்ததும் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 500 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்காலிலும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை கொண்டு 27 அயிரத்து 862 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் இன்று முதல் தண்ணீர் இருப்பு வரை திறக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 கன அடி திறப்பை படிப்படியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.