Jan 24, 2024, 7:26 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை அழிக்கும் அளவில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் ஒரு கொடுமையான நிலைமை நிலவி வருவதை தமிழக முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இனியும் கனிம வளங்களை கடத்துவதை அனுமதிக்க இந்த மாவட்ட மக்கள் தயாராக இல்லை. கேரள மாநிலத்தில் ஏராளமான மலைகளும், மணல்மேடுகளும் இருந்தும் கூட அங்குள்ள அரசு அந்த கனிம வளங்களை எடுப்பதில்லை. அந்த மாநில மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். அந்த விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுகிறேன்.
அதே நேரம் இங்கிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு பதிலாக கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் இங்கு வந்து கொட்டப்பட்டு இந்த மாவட்டம் குப்பை கிடக்காக மாற்றப்பட்டு வருகிறது. 20 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியை அழிக்க தமிழக அரசு துணை போவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதன் மூலம் குமரி மாவட்டம் மக்களை ஆழ தமிழக அரசுக்கு தகுதி இல்லை என்பது தெளிவாகிறது. நேற்று திருவட்டார் அருகே கனிமவள கடத்தல் லாரி மோதி இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.