தர்மபுரி மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே உணவு தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்து காட்டு யானை, ஏரி கரையில் ஏறும்போது, மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 7ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக விளை நிலங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த விபத்தில் நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். தற்போது தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசியதால் யானை உயிரிழந்துள்ளது. இதற்கு மின்வாரியத்தின் அலட்சியம் தான் காரணம். யானையின் உயிரிழப்பை காரணம் காட்டி மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.