தர்மபுரியில் கிணற்றில் விழுந்த குழந்தை பருவம் மாறா குட்டி யானை பத்திரமாக மீட்பு

Mar 11, 2023, 4:06 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கட்டமடுவு கிராமத்தில் தண்ணீர் நிரைந்த சுமார் 30 அடி ஆழத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 4 மாத குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. யானை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் கொடுத்த வழிகாட்டுதலின்படி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவி்க்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக யானையை மிட்கும் பணியில் ஈடுபட்டனர். பிறந்து நான்கு மாதங்களேயான, குழந்தை பருவம் மாறா இந்த யானையை குறுகிய நேரத்திலேயே அதிகாரிகள் கயிறு கட்டி கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். 

மீட்கப்பட்ட குட்டி யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து யானை தரையில் படுத்து தனது குறும்பு தனத்தை காட்டத் தொடங்கியது. யானையின் குறும்புத் தனத்தை அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

குட்டி யானை கிணற்றில் விழும் பொழுது தண்ணீர் இருந்ததால் யானையின் உடலில் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குட்டி யானையானது சிறிய கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டு ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.