Jun 29, 2024, 1:49 PM IST
பென்னாகரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ஸ்கேன் கருவியை வைத்து சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொன்ன பெண் புரோக்கர் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கையும், களவுமாக சிக்கியது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து ஆணா? பெண்ணா? என தெரிவிக்கும் கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதார துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர்.
ஆளில்லா வீட்டில் வைத்து பரிசோதனை செய்த இந்த கும்பல் தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடராஜன், சின்னராஜ், மற்றும் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரை சேர்ந்த லதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதில் முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.