Oct 12, 2023, 11:18 AM IST
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய பகுதியில் காவல் ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட்டனர். முள்ளிகாடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முள்ளிகாடு மாதையன் என்பவரின் விவசாய தோட்டத்தில், ராஜேந்திரன் (வயது 38), திருமூர்த்தி (23), மாதையன் (44) ஆகிய மூவரும் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 300 லிட்டர் ஊறல் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் 15 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.