Nov 5, 2023, 9:51 PM IST
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் வீதி பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சி துவக்கப்பள்ளி கோவை மாநகராட்சி 82 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியின் அவல நிலையை தான் நாம் பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக வீதிகளிலும், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து குளம்போல் காட்சியளித்தது.
கோவை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடாமல், அலட்சியம் காட்டி வரும் மாநகராட்சியில் செயல்பாடால் தற்பொழுது அந்த துவக்கப்பள்ளி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. நாளை திங்கட்கிழமை பள்ளி திறக்கும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை நீரும் கழிவு நீரும் தேங்கி பள்ளி சுகாதாரமற்ற நிலையில் நோய் தொற்று பரவும் விதமாக காட்சியளிப்பது அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவர்களின் நலனை கருதி கோவை மாநகராட்சி உடனடியாக அப்பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவு நீரும் மழை நீரையும் தூய்மைப்படுத்தி சுகாதாரமான சூழ்நிலையில் மாணவர்கள் படிக்கக்கூடிய சூழ்நிலையை உடனடியாக உருவாக்க வேண்டும். நோய் தொற்றில் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களினுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.